பக்கம்:தேன் சிட்டு.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
72
தேன் சிட்டுகளைத் திறந்து பார்த்தார். எல்லோருக்கும் கவலை நீங்கிற்று. இருந்தாலும் அவருக்கு நினைவு முற்றிலும் வந்துவிட்டதா என்பதில் ஐயமிருந்தது.

பாலை வாயிலே ஊற்றியவர், "என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா? நான் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்” என்று மெதுவாகக் கேட்டார்.

தன்னுணர்வு பெற்ற சாதுவிடமிருந்து அதற்கு அற்புதமான பதில் ஒன்று கிடைத்தது. "உங்களை எனக்கு நன்றாகத் தெரிகிறது. எந்தக் கை என்னை முன்பு அடித்ததோ அதே கை எனக்கு இப்பொழுது பால் வார்க்கிறது. யார் என்னை அடித்தாரோ அவரே எனக்கு இப்பொழுது பால் கொடுக்கிறார்" என்று அந்த சாது கூறினாராம். தம்மை அடித்து மூர்ச்சையடையச் செய்தவருக்கும், பிறகு மூர்ச்சை தெளியும்படி அன்போடு உதவி செய்தவருக்கும் உள்ள வேறுபாட்டை மறந்து அவ்விருவரிடத்திலும் விளங்குகின்ற இறைவனுடைய உணர்விலேயே நின்றார் அவர்.

திருமூலர் கதையைப் போலவே இந்தக் கதையும் என் உள்ளத்தைக் கவர்ந்திருக்கிறது: அந்த சாதுவின் மனப்பக்குவம் நமது குறிக்கோளாக நிலைத்து நிற்க வேண்டும். அதுவே இன்பத்திற்கு வழி; அதுவே மானிட சாதியை ஓங்கச் செய்யும் மந்திரம்.