பக்கம்:தேவநேயம் 1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவணர்

1


தேவநேயம்-உருவாக்கம்


'தேவநேய உருவாக்கம்' அவர் இயற்கை எய்திய நாள் தொட்டே என்னுள் அரும்பியது. அஃது அவர் வரலாற்றிலும், அவர் பெயரால் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன அறக்கட்டளைப் பொழிவாகிய தேவநேயப்பாவணரின் சொல்லாய்வுகள் என்னும் பொழிவு நூலிலும் வெளிப்பட்டது. அதன் பின்னர்த் தமிழ்நாட்டு அரசு, பாவாணர் அகரமுதலித் திட்ட மேலாய்வுக்கென அமைத்த ஐவர் குழுவின் அறிக்கையிலும் வலியுறுத்தப்பட்டது. தேவநேய உருவாக்க முன்வரைவுகள் இவை.
தேவநேய உருவாக்க வகையாக அவ்வரைவுகளில் இடம் பெற்ற குறிப்புகள் வருமாறு:
தேவநேயர் படைப்பாக்கங்களை எல்லாம் ஒருங்கு திரட்டி ஓரடைவு செய்தால் அது தேவநேயமாகத் திகழும். ஆசிரியர் தொல்காப்பியனார் தொல்காப்பியத்தால் நம்முடன் ஒன்றி உறைந்து உடனாகித் திகழுமாப் போலத் தேவநேயத்தால் தேவநேயரும் நம்மொடும் ஒன்றி உறைந்து உடனாகித் திகழ்வார்.
தேவநேயரின் அகரமுதலி அவராலேயே முற்றுற முடிக்கப் பெற்றிருப்பின், 'மற்றொன்று வேண்டா' என்னும் நிலையில் அஃதொன்றே தேவநேயமாகத் திகழ்ந்திருக்கும்! அதனைப் பெரும்பேறு தமிழ்மண்ணுக்கு வாய்க்காமையால் கிடைத்த - கிடைக்கின்ற - அளவிலேனும் தேவநேயத்தை உருவாக்கி விடுதல் வேண்டும். அதனை உருவாக்குதல் எவ்வண்ணம்?
தேவநேயப் படைப்பெல்லாம் சொல்லாய்வாகவே வெளிப் பட்டவை. அவர், எப்பொருளை எடுத்துக் கொண்டு பேசினாலும் எழுதினாலும் அவர்க்கு முந்துற நிற்பது சொல்லாய்வே! சொல்லாய்வு இல்லாத உரையாட்டும் கூட அவர்மாட்டு அமைந்தது இல்லை! ஆகலின், அவர்தம் படைப்புகளில் உள்ள சொல்லாய்வுக் குறிப்புகளை எல்லாம் அகர முறையில் தொகுக்க வேண்டும். அவர் வேர்கண்ட சொற்களுக்கு வேர், விளக்கம் கண்ட சொற்களுக்கு விளக்கம், ஒப்புமை கண்ட சொற்களுக்கு ஒப்புமை, பொருள் மட்டும் கூறிய சொற்களுக்குப் பொருள், சொல்லாக மட்டும் சொல்லியிருப்பினும் அச்சொல் ஆகிய எல்லாவற்றையும் தொகுத்து அகர முறையில் அமைத்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/18&oldid=1480950" இலிருந்து மீள்விக்கப்பட்டது