பக்கம்:தேவநேயம் 1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தேவநேயம்

தேவநேயம்



வடமொழியைத் தென்மொழி ஆக்கமாக்கியதாயினும் சரி, ஆங்கிலத்தைத் தமிழாகப் பெயர்த்ததாயினும் சரி, புதிதாகப் படைத்த கலைச் சொல்லாயினும் சரி, அவ்வகரமுதலியில் விடுபாடு இல்லாமல் இணைத்துவிடவேண்டும். அவ்வாறு அமைந்துவிடுமானால் சொல்லாய்வாளர்க்குத் தேடிவைத்த திருவாகத் திகழ்தல் உறுதியாம். அவர்வழியில் ஆயத்தலைப் படுவார்க்குக் கிடைத்தற்கரிய கருவிநூலாம். அத்தலைப்பாடே தலைப்பாடாக வேறெவர் ஊன்றினாலும் சரி, ஊன்றா தொழியினும் சரி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்கக மேனும் முந்து நிற்றல் வேண்டும். அது தலையாய கடமையாம்.
திருவாசகம் இன்றில்லையேல் சாழல், தெள்ளேணம் முதலிய சொற்களை வேறெங்குக் காணமுடியும்? என ஏங்குபவர் பாவாணர். ஆயிரம் ஆயிரம் சொற்களை மணிமொழியார் தம் நூலில் படைத்திருந்தாலும் சாழலும் தெள்ளேணமும் தனித்துயர்ந்து தலைதூக்கி நிற்பானேன்? அவ்வாட்சி பிறர்மாட்டுக் காண இயலாப் பெற்றியவை. பத்தோடு பதினொன்று என்று இல்லாமல், அவருக்கே உரிமை பூண்ட ஆட்சிச் சொற்கள் அவை. ஆதலால் அவையே மணிவாசகனார்க்குத் தனிவீறும் தனிப்பேறும் அருளிக் கொண்டுள்ளனவாம்.
சாழலும் தெள்ளேணமும் நினைவில் வருவார்க்கு, இளங்கோவடிகளோ, திருத்தக்கதேவரோ, தேவாரம் பாடிய மூவரோ பிறர்பிறரோ தோன்றாமல் மணிவாசகப் பெருந்தகையே தண்ணாரும் எழில்முகம் காட்ட வாய்க்கின்றதாம். அவ்வாறு பாவாணர்க்கே உரிய-பாவாணரையே அடையாளம் காட்டக் கூடிய-சொற்கள் ஒன்றா? இரண்டா?
பண்டாரகரா1 பண்டுவரா2 பாவாணரை நினைவு கூராமல் முடியுமா?
"குளம்பி3 வேண்டுமா? கொழுந்துநீர்4 வேண்டுமா?" என்று வினவுவாரிடைப் பாவாணர் அன்றோ மென்னகை புரிகிறார்.
"நான் அணியமாக5 இருந்தேன்; நீங்கள் இப்பொழுது வந்தது ஏந்தாக6 இருந்தது" என்பாரிடைப் பாவாணர் இரண்டறக் கலந்து திகழ்கிறார்.
"இந்த மொட்டான்7 தான் அந்த மேடைக்கு8 அமைவாக இருக்கும்" என்பவர் இன்றமிழ் உள்ளத்தில் பாவாணர் வீற்றிருக்கிறார்.
"பழக்கூட்டும்9 பனிக்கூழும்10 எனக்கு ஏற்றுவருவதில்லை வெதுப்பமாகப் பருக வேண்டும்" என்பார் மாட்டுப் பழக்கூட்டும் பனிக் கூழுமாக அல்லவோ பாவாணர் குளிர்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/19&oldid=1480952" இலிருந்து மீள்விக்கப்பட்டது