பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59. இருவர் தேட அரியராய்ச் சிவபிரான் நின்றது.

73

திரளாய் நின்றார். அந்த தீத்திரள் யாரும் உணராத வகையில் அண்டமுற எங்கும் பரவி தனக்கு இணையிலா வகையில் ஓங்கி நின்றது. இருவரும் அதைக் கண்டனர், மிக அஞ்சினர்; அங்காந்தனர், பேதுற்றனர், தள்ளாடினர், நடுங்கினர், ஒலமிட்டனர். அந்த எரி உருவம் பருத்த மலைபோற் பரந்துநிற்கவே அது காணமுடியாத வடிவமாயிருந்தது, அறிய முடியாத ஜோதியாயிருந்தது; அவ்வடிவை இருவராலும் காணவும் முடியவில்லை, சாரவும் முடியவில்லை. அதன் அடித்தலத்தைத் திருமாலும் முடித்தலத்தைப் பிரமனும் தேட முயன்றனர். அன்னம், கழுகு, பருந்து முதலிய பல பறவைகளின் வடிவோடு பிரமன் விண்ணெலாம் பறந்து திரு முடியைத் தேடினன். நீலநிறப் பன்றியின் உரு எடுத்துக்கொண்டு திருமால் மண்ணெலாம் கெண்டித் திருவடியைத் தேடினர். இருவரும் பல காலம் தேடினார்கள். அண்ட மண்டலம் எல்லாம் தேடினார்கள். எங்கும் தேடினார்கள். ஊழிக் காலம் வரைத் தேடியும் அவர்களால் அவ்வுருவை நணுகவும் முடியவில்லை; அளவிடவும் முடியவில்லை. இருவரும் தேடித்தேடி அயர்ந்தார், அலமந்தார், நிலைமை கண்டார், முடிசாய்த்து நின்றார், இவரன்றித் தேவர் பிறரில்லை எனநின்ற இறைவரை நாணத்துடன் தொழுது போற்றினார், “ஹர” பாராயணம் செய்தனர், ஆற்றலோம் என்றார்; ஜய ஜய என மிகத் துதித்தார், நாதனே இவன் என்றார். நமசிவாய எனும் ஐந்தெழுத்தை ஒதினார். அங்கணா அருளாய் என்றார், அப்பொழுது அந்தத் தழலெனும் தூண் நடுவிலிருந்து இறைவர் வெளிப்பட்டார். இருவரும் பணிந்தனர், இறைவர் இருவருக்கும் சரண்கொடுத்தார், மகிழ்ந்து அருளினர், அவரதம் பாவத்தைப் போக்கினார்.

இருவருக்கும் காண்பரியவனாய் நின்றவனே என இறைவரை ஏத்துதல்தான் இன்பம்; அங்ஙனம் ஏத்துபவருடைய வினை விலகும். அக்காரணம் பற்றி அடியார்களே! இருவரும் உணராத வகையில் இறைவர் எரியுருவாய் நின்ற அத்தன்மையையே நீங்கள் பேசுங்கள்.