பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

தேவார ஒளிநெறிக் கட்டுரை

சென்று அக்காட்டில் அருந்தவத்திருந்த அருச்சுனனோடு ஒரு பன்றியின் காரணமாக யாருங்காணத் திறலுடன் அமர்செய்து, அருச்சுனனது நிலையை அசையச்செய்து, அவனது (அம்பறாத்) தூணியறவும், அவன் வில்லின் நாண் அறவும், அவன் வில் ஒடியவும், அவன் உடலில் அம்பு தைக்கவும், அவன் நாணங் கொள்ளவும் செய்தனர், இங்ஙனம் அவன் நிலையையும் பொறையையும் அளந்து அவனுடைய மாதவத்துக்கு இரங்கி அவனுக்கு அசை விலா உயர் படைகளையும் அத்திரங்களையும், பாசுபதம் என்னும் படையையும், பொன்னெடுங்கோல் ஒன்றையும் வில்லையும் தந்தருளினர்.

76. சுடலை - கான் [216]

ஈமம், கடம், காடு, இடுகாடு, சுடுகாடு, படுகாடு, புறங்காடு, முதுகாடு, கான், எரிகான், கரிகான், சுடுகான், படுகான், முதுகான், முளிகான், சுடலை, சுரம், புறவம், மயானம், வனம்-எனச் சுடலையுங் காடுங் குறிப்பிக்கப் பட்டுள.

இடுகாடு-சுடுகாடுகளில் கழுகு, நரி, பேய், கூகை சேரும். சுடுகாட்டில் வளரும் மரம், கொடி வகைகளுக்குத் தலைப்பு 148-III பார்க்கவும்.

77. சுனைகள் [217]

சுனைகள் கண்ணுக்கு அழகிய; குளிர் நீரைக் கொள்வன; சோலைகளாற் சூழப்பெற்றன; சுனைகளின் வழியே அருவிகள் இழிந்து ஒடும்; சுனைகளில் நீலமலரும் (நீலோற்பலமும்) நெய்தலும் மலரும்; கெண்டை மீன்கள் பாய்வதினாற் கனைகளில் உள்ள நீல மலர்களின் மொட்டுகள் மலரும்.

78. சூரியன் [218 ]

i. பெயர்கள்:- அருக்கன், ஆதித்தன், இரவி, என்று, கதிரவன், சுடர், ஞாயிறு, பகலோன், பரிதி, வெய்யவன்.