பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ராஜ்யச் சீரமைப்புப் பிரச்னையில் அடிப்படையான ஜனநாயகக் கொள்கைகளை, திரு—கொச்சி சூழ்நிலை அனுமதித்த அளவு கடைப்பிடிப்பதில் இதர இடதுசாரிக் கட்சிகளான கே. எஸ். பி., ஆர். எஸ். பி.யை உடனழைத்துச் சென்றிருக்கின்றனர். தி.த.நா.காங்கிரஸோடு சேரவேண்டியதில் சேர்ந்து. எதிர்க்க வேண்டியதில் எதிர்த்திருக்கிறார்கள்—தென் தாலுக்காக்களைப் பொறுத்தமட்டில், தி.த.நா., காங்கிரஸோடு இணைவதிலும், கூடலூரைப் பொறுத்தமட்டில், தி.த.நா.காங்கிரஸின் தமிழ் ராஜ்ய வெறியை அம்பலப்படுத்துவதிலும் திறமையாக நடந்திருக்கிறார்கள். இரண்டு தமிழ் சுயேச்சை அங்கத்தினர்களும் பல தீர்மானங்களிலும் நிதானமாகப் பிரதிபலிக்கப் பெருந்துணை செய்திருக்கிறார்கள். மொழிவாரிப் பிரிவினை, கிராம அடிப்படையில் எல்லைக் கோடு, கேரளத்தின் தண்ணீர் வசதி முதலிய தீர்மானத்தில் தி.த.நா.காங்கிரஸை நடு நிலைமை வகிக்கும்படி செய்ததும், எல்லைக் கமிஷன் அல்லது நட்புறவு கொண்ட பேச்சை கோரும் தீர்மானங்களில் சாதகமாக ஓட்டுப் போடும்படி செய்ததும் ஒற்றுமைத் திசையில் கம்யூனிஸ்டுகளின் குறிப்பிடத் தக்க சாதனைகள்.

மிகமிக நிதானமாக, மொழிவழி ராஜ்யப் பிரச்னைக்கு சுமுகமான, சரியான ஜனநாயகப் பைசல்காண வேண்டும் என்ற அக்கரையோடு நுனித்து ஆய்ந்தறிய விரும்புகிறவர்களுக்குத்தான், கம்யூனிஸ்டுகள் ஜனநாயக திசையில் எடுத்துக்கொள்ளும் சிரமமும், காட்டும் சகிப்புத் தன்மையும் விளங்கும்.

(2) டி. வி.தாமஸ் பேசிய பேச்சு, "தினமலர்" 26-11-55) இதழில் வெளிவந்திருக்கிறது. அதில் கிராம அடிப்படையில் எல்லைக்கோல வேண்டுவதுதான் ஜனநாயக முறை என்பதை வற்புறுத்துகிறார். ஆந்திர ராஜ்யத்திற்கும் சென்னை ராஜ்யத்திற்கும் ஏற்பட்டுள்ள எல்லைத் தகராறைத் தீர்க்க சென்னை ராஜ்யம் குறிப்பிட்டுள்ள நான்கம்சத் திட்டத்தை, திரு-கொச்சி ராஜ்யமும் சென்னை ராஜ்யமும் தங்களுடைய எல்லைத் தகராறைத் தீர்க்க ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏற்றுக்கொண்டு சுமுகமாகத் தீர்க்க முடியும் என்றும் வற்புறுத்தியிருக்கிறார்.

இவைகளையெல்லாம் கணக்கிலெடுத்துப் பார்த்தால், சென்னை கம்யூனிஸ்டுகளும் திரு-கொச்சி கம்யூனிஸ்டுகளும் ராஜ்யச் சீரமைப்புப் பிரச்னையை ஜனநாயக முறையில், தமிழக, கேரள மக்கள் நலனுக்குக் குந்தகம் எந்த வழியிலும் ஏற்படாமலும், தேசீய ஒற்றுமையை வளர்க்கும் விதத்திலும், நடைமுறைக்கு ஒத்த முறையிலும் தீர்க்க போராடி வருகிறோம் என்பது விளங்கும். நாங்கள் சந்தர்ப்பவாதிகள், வழவழாக் கொழ கொழாக்காரர்கள், கட்சி நலனைத் தேச நலனைவிடப் பெரிதுபடுத்துகிறவர்கள், இனத் துரோகிகள் என்று