பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

என்ற கொள்கையில் அடங்கியிருக்கிறது என்பதை நுனித்தறிவார் நன்றாக உணரமுடியும்.

"காமராஜரே! தேவிகுளம் பீர்மேடு பகுதியைத் தமிழ்நாட்டுடன் சேர்க்காவிட்டால் ராஜிநாமா செய்வதாக டில்லி சர்க்காரிடம் கூறுங்கள். கிடைக்காவிட்டால் பிறகு பார்த்துக்கொள்ளலாம்" (ம.பொ.சி.யின் மதுரைப் பேச்சு— 22— 11—55 'தினத்தந்தி). இது தமிழரசுக் கழகத் தலைவரின் போராட்டப் பாணி!

ஒன்றுமட்டும் உறுதி. ம.பொ.சி.யின் மேற்கூறிய போக்கு, மொழிவழி ராஜ்ய இயக்கத்தில் 'தமிழ்மக்களின் தன்னேரிலாத் தலைவன் தான்' என்று ஜோடித்துக்காட்டி அவர் திருப்தி உணர்ச்சியடைய உதவலாம். ஆனால், அது தமிழர்களின் ஒன்றுபட்ட, வெற்றிகரமான ராஜ்யச் சீரமைப்பு—ஜனநாயகப் போராட்டத்திற்கு உதவிகரமா யிராது. இந்த முதல் வட்டத்தில், தேவிகுளம்—பீர்மேடுப் போராட்டத்தின் முன்முயற்சியை, ம.பொ.சி. கையிலிருந்து காமராஜர் பிடுங்கிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. போராடும் நிலைமை ஏற்பட்டால், காமராஜருக்கு விரோதமாக தமிழரசுக் கழகத் தலைவராகத் தனித்து நின்று போராடும் பெரும் பாரத்தை—ஆதிசேஷன்போல்—வெற்றிகரமாகச் சுமக்கவும் முடியாது.

மாற்றுக் கட்சிக்காரர்களை மாற்றுக் கட்டையாக இந்த ராஜ்யச் சீரமைப்புப் பிரச்னையிலேயே உறுதியாக நிர்ணயித்துள்ள ம.பொ.சி. தேவிகுளம்—பீர்மேடு பிரச்னையில் எவ்வாறு இறுதிவரைப் போராடுவார் என்பது பொதுவாகத் தமிழர்களுக்கும் குறிப்பாக தேவிகுளம்— பீர்மேடு தமிழர்களுக்கும் போகப் போகத் தெரியும்.

திராவிடக் கழகம்

இதுவரை 'திராவிட நாட்டு'க்காகப் போராடி வந்த ஈ. வெ. ரா. திடீரென தமிழகத்திலிருந்து மலையாளிகளை விரட்டக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். கருத்துப் பிரசாரத்தில் இஷ்டம்போல் பிரயாணம் செய்யும் 'பெரியார்' அவர். 'பணிக்கர் கேட்ட பொழுது தேவிகுளம்-பீர்மேட்டை கேரளத்திற்குக் கொடுத்தாராம்!' தமிழர்கள் கோபிக்கக் கண்டதும் அந்தத் தாலூகாக்கள் சென்னையோடு இணையவேண்டும் என்கிறார். இத்தகைய, 'க்ஷணச் சித்தம், க்ஷணப் பித்தம் கொண்ட' 'திராவிடத் தந்தை', தேவிகுளம்— பீர்மேடு மீட்சிப் போராட்டத்தில் குதிக்கும்படி, வழக்கம்போல் தமிழ் மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். ம.பொ.சி.யும் 'ஒத்துழைக்கத் தயார்' என்று பதில் கொடுத்தார். அரசாங்கக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம், குட்டிகிருஷ்ண நாயரின் கேள்விக்குப் பதில் சொல்லும்போது, "ஈ.வெ.ரா.வின் பேச்சை நான் வழக்கமாகப் மதிப்ப-