பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

தில்லை' என்றார். இத்தகைய நவக்கிரகத் தலைவர்கள், தேவிகுளம்-பீர்மேடுத் தமிழர்களுக்காக, ஓரணியாகப் போரணி வகுத்து நிற்கிறார்களாம்.

தி. மு. கழகம்

தி.மு.க. பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் அறிக்கையும் சரி, அண்ணாத்துரை பேச்சும் சரி, ஒன்பது தாலூகா வாதமே பேசுகின்றன. "தி.மு. க.—வைப் பொறுத்தவரை, தேவிகுளர், பீர்மேடு, நெய்யாற்றின்கரை, சித்தூர் ஆகிய நான்கு தாலூகாக்கள் தமிழகத்துடன் சேரவேண்டிய விளக்கத்தையும் அதற்குள்ள உரிமையையும் திட்டவட்டமாகத் தெரிவிப்பதையும் அனைவரும் அறிவர். அதுமட்டுமல்ல : தி.மு.க. திராவிடக் கூட்டாட்சியை நிறுவ, எந்த அளவு உறுதிகொண்டிருக்கிறதோ, அதே போன்றே திராவிடத்திலுள்ள எந்த மொழிவழிப் பகுதியினரும் பிறரின் உரிமையைப் பறிக்க செய்யப்படும் அநீதிகளைத் தகர்த்தெறியும் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்" என்று கொச்சி சித்தூர் தமிழக இணைப்பு மகாநாட்டில் தி. மு. க.உதவிப் பொதுச் செயலாளர் பேசி யிருக்கிறார் (தினத் தந்தி 11-11-55). மலையாளப் பிரதேசத்தை மிகுதியாக உடைய சித்தூர், நெய்யாற்றின்கரைத் தாலூகாக்களை ரூபாய்க்கு பதினாறு அணாவாகக் கோருவதும், தேவிகுளம்-பீர்மேடு விஷயத்தில் தி.த.நா. காங்கிரஸ் நினைவூட்டிய அளவு கூட, பள்ளிவாசல், பெருவந்தானம் பகுதிகளை நினைவூட்டாதிருப்பதும், கூடலூர் தாலுக்காவைப் பற்றி 'கப்சிப்' என்றிருப்பதும், தி.மு.க. தமிழ் ராஜ்ய வெறியில் தி.த.நா.காங்கிரஸ், தமிழரசுக் கழகங்களுக்கு ஒரு அடி முன்னால் பாய்வதையே காட்டுகிறது. சொல்லில்தான் சிங்காரமாக, மொழிவழிப் பிரிதலும் இனவ வழிச் சேர்தலும் என்கிறார்கள். கோரிக்கையில் மலையாளிப் பிரதேசமும் தமிழ் ராஜ்யத்திற்கு வேண்டுமென்கிறார்கள். மலையாளி தமிழன் இரண்டு பேருக்கும் 'இன நியாயம்' வழங்கும் நிதானத்தை விட்டு, தமிழ் ராஜ்ய வெறியோடு, "போராட்டம்" என்று முழங்குகிறார்கள். அதோடு மட்டுமல்ல: கம்யூனிஸ்டுகளை 'இனத் துரோகிகளாக்க'த் துடிக்கிறார்கள்.

தி.மு.க. தமிழ்த் திராவிடர்களால், அவர்களுடைய கோரிக்கை நியாயமென்று, அவர்களுடைய இனச் சகோதரர்களான ஒரு மலையாளித் திராவிடனையாவது ஒப்புக் கொள்ளச் செய்ய முடியுமா? தி.மு.க.வின் பார்வையில் 'திராவிட நீதி' என்பது, தமிழனுக்கொரு நீதி, மலையாளிக்கொரு நீதியா? இவர்கள் ஜனநாயக அடிப்படையில், தமிழனும் மலையாளியும் ஒப்புக் கொண்டு சுமுகப் பைசல் காண்பதற்காகக் கோரிக்கை வைக்கிறார்களா? அல்லது தமிழகத்திலுள்ள காங்கிரஸ், தமிழரசுக் கழகம், தி.க. ஆகியவை