பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தையும், தேசீய முன்னேற்றத்தையும் மிகப் பெரிதாகக் காட்டி, அதற்கு தேசீய ஒற்றுமையே அவசர அவசியம் என்று திரும்பத் திரும்ப வற்புறுத்தி மொழிவழி ராஜ்யத்தின் முதலிடத்தை பின்வரிசைக்குத் தள்ளினார். நால்வர்குழு, பீர்மேடு விஷயத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி விளைத்தது. சீரமைப்புக் குழு சென்னை ராஜ்யத்திற்கென்று சிபார்சு செய்த செங்கோட்டைத் தாலூகாவின் மேற்குப் பகுதியை எக்காரணமும் இன்றி கேரள ராஜ்யத்தில் அநியாயமாக இணைத்துவிட்டது.

மத்திய சர்க்காரின் தீர்ப்பின் விளைவாக நாடு முழுவதும் கொந்தளிப்பு. கொந்தளிப்பைத் தணிக்க, மக்களை ஒற்றுமைப்படுத்தி, உணர்ச்சிப் பெருக்குடன் தேச முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்ல பிசகற்ற வகையில் மொழிவழி ராஜ்யங்களையும் எல்லைகளையும் அமைக்கவேண்டியது ஜனநாயக முறையாயிருக்க, மத்திய சர்க்கார் வேறு முறையைக் கடைப்பிடிக்கிறது. மக்களின் ஆவேச எழுச்சியைத் துப்பாக்கி முனையில் தணிக்க, விபரீத உறுதி கொள்கிறது. மொழிவழி ராஜ்யக் கிளர்ச்சியை ஒடுக்க, எதிர்ப் பிரரேபணையாக, "பிரதேச" யோசனையைத் தூண்டிவிட்டு வரவேற்கிறது. "பூர்வப் பிரதேச" (வங்காள -பீகார் இணைப்பு) பிரரேபணையைத் தூண்டிவிட்டு, நேருவும் காங்கிரஸ் மேலிடமும் பிரமாதமாக ஆதரிக்கிறார்கள். சென்னை ராஜ்யம், கேரளம், கர்நாடகம் ஆகியவற்றை இணைக்கிற "தட்சண பிரதேச " யோசனையையும் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.

தேசத்தின் ஒற்றுமையை, வளர்ச்சிக்கான தேவையை மத்திய சர்க்காரும், காங்கிரஸ் தலைவர்களும் கையாண்டு வருகிற மேற்கூறிய முறைகளால் ஏற்படுத்த முடியாது. இந்தியாவில் வாழும் எல்லா மக்களும் விரும்பும் மொழிவழி ராஜ்யங்களை அமைப்பதும், எல்லைப் பிரச்னைகளை கம்யூனிஸ்ட் கட்சி கூறிவருகின்ற கொள்கையின் வழியில் தீர்ப்பதுமே மக்களுக்கிடையில் இன்று உள்ள மனக்கசப்பை

நீக்கி சகோதர பாவத்தைப் பிறப்பிக்கும்; எல்லா இன மக்களின் விருப்பங்களைப் பூர்த்திசெய்து அவர்களின் ஒத்துழைப்புடன் இந்திய ஐக்கியம் வலுவடையும் என்று கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது.