பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவிகுளம்-பீர்மேடு

ட்டசபையில், தேவிகுளம் - பீர்மேடு பற்றிய விவாதத்தில் எங்கள் பேச்சுக்களையும், வாக்கெடுப்பில் எங்கள் நடுநிலைமை வகிப்பையும், பல கட்சியினரும் பத்திரிகையாளர்களும் அவரவர் கோணத்திலிருந்து காரசாரமாக விமர்சனம் செய்துள்ளனர். எழுதுகோலை நெருப்பிலும் கசப்பிலும் தோய்த்து, கண்டனக்கணைகளை விடுத்துள்ளனர்.

சீரமைப்புக் குழுவின் சிபார்சின்மீது விவாதத்தைத் தொடங்கி வைத்தவன் நான். எனது பேச்சின் இறுதியில் நிதி அமைச்சர் தேவிகுளம் - பீர்மேடு நமக்கு என்கிறீர்களா? அல்லது மலையாளிகளுக்கு என்கிறீர்களா? உங்கள் பேச்சு முன்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை, பின்னே பார்த்தால் செட்டியார் குதிரை என்பது போலல்லவா இருக்கிறது! ஒன்றும் புரியவில்லையே' என்று விமர்சித்தார். ராஜா சர்.முத்தையா செட்டியார் "ஆம் அல்லது இல்லை என்று இரண்டில் ஒன்று சொல்லுங்கள் என்று என்னை நெருக்கினார். "சட்டசபைக்கு வெளியில் பல காங்கிரஸ் நண்பர்களும் ஏனையோரும் இரண்டில் ஒன்று பதில் சொல்லுங்கள்" என்றே திரும்பத் திரும்ப கேட்டார்கள். வாக்கெடுப்பு நடந்த, தேவிகுளம் - பீர்மேடு திருத்தம் கொண்டுவந்த ஆர்.வி.சுவாமிநாதன் பேசும்போதும், "ஜீவானந்தம் 'வெட்டொன்று துண்டிரண்டு' என்றே பேசும் பழக்கமுடையவர். ஆனால், தேவிகுளம் - பீர்மேட்டைப் பொறுத்தமட்டில் வழவழா கொழகொழா என்று பேசினார் " என்று குற்றம் சாட்டினார்.

எதிர்ப்புக் கணைகள்

நானும் தோழர் ராமமூர்த்தியும் இதுபற்றி இறுத்த பதிலை "விடுதலை" பத்திரிகை "வெண்டைக்காய் பதில் " என்று தலையங்கம் தீட்டிக் கிண்டல் செய்திருக்கிறது. பலகாலும் தமிழ்நாடு கம்யூனிஸ்டுகளுக்காக 'பரிதாபக் கண்ணீர்' வடித்து வந்திருக்கிற ஈ.வெ.ரா.வின் "விடுதலை" அந்தத் தலையங்கத்திலும் தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்டுகளின் "இருதலைக்கொள்ளி எறும்பு நிலைமை"யைக் கண்டு, கசிந்துருகி, ஒரு குடம் பரிதாபக் கண்ணீர் வடித்திருக்கிறது.

தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யின் "செங்கோல் - தமிழன்", காங்கிரஸ், தி.க., தி.மு.க. தலைவர்களை தேவிகுளம்- பீர்மேட்டைப் பொறுத்தவரையில் சந்தர்ப்பக் கூத்தாடிகள் என்று எடுத்துக்