பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

காட்டிவிட்டு, நானும் ராமமூர்த்தியும் சட்டசபையில் பேசிய பேச்சு "புரியாத புதிராக" இருக்கிறது என்று கூறி, எல்லைப் பிரச்னையில் எங்களுக்குள்ள"விளங்காமை"யை நையாண்டி பண்ணுகிறார் அவருடைய தம்பிமார்களில் சிலர், எங்களுடைய 'நடுநிலை'மையைக் கண்டு மனம் பொங்கி மதர்ந்து கிளர்ந்து, நிதானம் தாண்டிய 'தமிழரசு'ப் பக்தி ஆவேசத்தோடு, "இனத்துரோகிகள்", "தமிழினத்தை அடகு வைக்கும் அரும்பணியாளர்கள்", "தமிழகத்து மாஸ்கோவாதிகள்", "காங்கிரஸ்காரர்களைவிடப் பிற்போக்காளர்கள் "அண்ணாத்துரைக் கும்பலைவிடக் கீழ்த்தரமானவர்கள்", "மலையாளிகளுக்கே கொடுத்துவிடலாமென்று ஈ.வே.ரா.வின் பாதையில் நடை போடுகிறவர்கள்", "மட்டமான கோழைகள்", "அபிப்பிராயத்தை வெளியிடும் தைரியமற்ற பூனைகள்" என்றெல்லாம் எங்களுக்கு 'சாட்டை' அடி கொடுத்து அர்ச்சித்திருக்கிறார்கள்.

தேவிகுளம் - பீர்மேடு தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர் ராமய்யா என்பவர், எங்களின் 'நடுநிலைமை வகிப்பு' பிடிக்காமல் வெகுண்டெழுந்து, நான் அவரிடம் 'ரகசியத்தில் கொடுத்த வாக்குறுதி'யை சந்திக்கிழுத்து, கம்யூனிஸ்டுகளின் "துரோகத்திற்கு" "தகுந்த பாடம் கற்றுக்கொடுங்கள்" என்று தாயகத்திலுள்ள தொழிலாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் பத்திரிகைகள் மூலம் அறிக்கை விடுத்திருக்கிறார். தி.மு.க.வின் தினசரியான ‘நம் நாடு'ம், ராமய்யாவின் அறிக்கையை பிடித்துத் தொங்கிக்கொண்டு, 'சந்தடி சாக்கில் கந்தப்பொடி கால் பணம்' என்ற மனப்பான்மையில் 'கம்யூனிஸ்டுகளிழைத்த துரோகம்' என்று முன் பக்கத்தில் கொட்டை எழுத்தில் தலைப்புக் கட்டி பிரசுரித்து எங்களை வாழ்த்தி மகிழ்ச்சி கொண்டாடியிருக்கிறது.

காட்டும் காரணம்

இந்த விஷயத்தில் கோயங்காவின் 'தினமணிக் கதிரும்' எங்களுடைய தமிழ்ப்பற்று வரட்சியை எடுத்துக்காட்டி, வழக்கம்போல் கம்யூனிஸ்ட் சங்கார நடனத்தை நடத்தியிருக்கிறது.

இத்தகைய எதிர்ப்புக்கும் கண்டனங்களுக்கும் காரணம் என்ன தேவிகுளம், பீர்மேடு இரு தாலூகாக்களும் சென்னை ராஜ்யத்தோடு சேர்க்கப்பட வேண்டுமென்ற திருத்தம் சட்டசபையில் ஓட்டுக்கு விடப்பட்டபொழுது, கம்யூனிஸ்டுகள் நீங்கலாக எல்லா தமிழ்நாடு கன்னட அங்கத்தினர்களும் ஆதரித்தார்கள். கம்யூனிஸ்ட் நீங்கலாக எல்லா மலையாள அங்கத்தினர்களும் எதிர்த்தார்கள். கம்யூனிஸ்ட் அங்கத்தினர்கள் மட்டும் நடுநிலைமை வகித்தோம். இதுதான் காரணம்.

எங்கள் நிலை என்ன?

1. எல்லைப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க, கம்யூனிஸ்ட்டு கட்சியின் திருத்தமாக, ராமமூர்த்தி ஒரு திருத்தம் கொடுத்தார்.