பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

அதில் இரண்டு அடிப்படை கொள்கைகளைக் குறிப்பிட்டோம். ஒன்று எல்லை வகுப்பதில் கிராமத்தை அடிப்படை உறுப்பாகக் கொள்ள வேண்டும். இரண்டு, கிராமத்தில் பெரும்பான்மை மக்கள் பேசுகிற மொழியையும், அந்தக் கிராமம் எல்லையை ஒட்டி இருக்கிறதா என்பதையும் கவனித்து எந்த ராஜ்ஜியத்தில் சேரவேண்டுமென்று முடிவு செய்யவேண்டும். இந்த இரண்டு கொள்கைகளும் நியாயமானவை என்றும், தாலுகாவை உறுப்பாகக் கொள்வது எல்லைப் பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்க்காது என்றும் 23-11-55 'தினமணி' தலையங்கம்கூட ஒப்புக்கொள்கிறது.

ஆறுகள் விஷயமென்ன?

தேவிகுளம் - பீர்மேட்டைப் பொறுத்தமட்டில் இந்த இரண்டு அடிப்படைகளோடு, மூன்றாவதொரு அடிப்படையையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்கிறோம். அது என்ன? தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களில் உற்பத்தியாகும் ஆறுகளின் தண்ணீர் கேரளத்தின் நீர்ப்பாசனத்திற்கும் மின்சார உற்பத்திக்கும் நியாயமாக உபயோகப்படுவதற்கும் அந்தப் பிரதேசத்திலிருந்து திரு -கொச்சி அசாங்கத்திற்கு கிடைத்துவரும் வருமானத்தில் நியாயமான பங்கை உபயோகிப்பதற்கும் உரிய ஏற்பாட்டைச் செய்யவேண்டும் என்பதுதான்.

ஏன் இந்த மூன்றாவது அம்சத்தைச் சிறப்பாகக் கூறுகிறோம்? தேவிகுளம் - பீர்மேடு உரிமைபற்றிக் கடுமையான கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டிருக்கின்றன. மலையாள மக்கள், தமிழ் மக்களிடையில் விரோத குரோதங்கள் இது விஷயத்தில் எண்ணெய் வார்த்து கொழுந்துவிட்டெரிய விடப்படுகின்றன.


கேரளத்தில் பீதிப் பிரச்சாரம்

திரு -கொச்சியின் முன்னாள் முதலமைச்சர் சி. கேசவன் பின்வருமாறு கூறுகிறார்: "தேவிகுளம்—பீர்மேடு திருவிதாங்கூரின் ஜீவாதாரமான இரண்டு நதிகளின் பிறப்பிடமாகும். பம்பையாறு திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதன் சர்வே வேலைகள் முடிந்து, எஸ்டிமேட்டுகளும் சமர்ப்பித்தாகிவிட்டன. திரு - கொச்சியின் பல்வேறு முன்னேற்றங்களுக்கும் உபயோகிக்கப்படும், பெரியாறு, பம்பையாறு ஆகிய நதிகளிலுள்ள தண்ணீர் நமக்குக் கிடைக்காமல் போகுமானால், திரு-கொச்சி பாண்டி நாடாகவும், பாண்டி நாடு திரு-கொச்சியாகவும் மாறும் காட்சி வரப்போகிறது. இது மிகவும் பயங்கரமான நிலைமையாக மாறும். கொச்சியிலும் எர்ணாகுளத்திலுமுள்ள சுத்தத் தண்ணீர் இதனால் பாதிக்கப்படும். செவ்வறை வரையிலுள்ள பிரதேசங்களில் விவசாயம் இதனால் பாதிக்கப்படும். வேனிற்கால சுகவாசஸ்தலமான ஆல்வாயி-

2