பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

லுள்ள இன்றைய வசதிகள் இனிமேல் கிடைக்காதவாறு மாற்றமடையும். பறவூர் தாலுகா முழுவதும் பாலைவனமாகும். பெரும்பாவூரிலுள்ள 'லிங்ட் இரிகேஷன்' திட்டம் வீணாகிவிடும். பம்பையாறு மத்திய திருவிதாங்கூரின் ஜீவநாடியாகும். குட்டநாட்டின் செழிப்பான விவசாயமும், குட்ட நாட்டிலிருந்து சபரிமலை வரையுள்ள வளமான பூமியும் நசித்துப் பயனற்றதாகிவிடும். அதோடு திருவிதாங்கூரும் நாசமாகும்.

"திரு - கொச்சியை பாதிக்கும் இவ்வளவு பயங்கரமான காரியத்தை செய்ய, காமராஜர் கள்ளப் புள்ளிவிவரங்களின்மூலம் டில்லியை நிர்ப்பந்தித்து ஒரு முடிவு ஏற்படச் செய்வாரானால் அந்த முடிவை எதிர்த்து முறியடிக்க நமது சர்க்காரும், மக்களும் ஒன்று திரண்டு தீவிரமாகப் போராடியாகவேண்டும். மக்களின் நலத்திற்காக ஒரு சர்க்காரால் வேண்டியதைச் செய்யமுடியாவிட்டால் அந்த சர்க்கார் இல்லாதிருப்பதே மேல்.

தேவிகுளம்-பீர்மேடு நம்மைவிட்டுப் பிரிந்துபோவதென்பது மிக மிக பயங்கரமான, நினைக்கக்கூட முடியாத ஒரு மாபெரும் ஆபத்தாகும்" (கேரளா பிரஸ் நிருபரிடம் கூறியது -- "தினமலர்" 16-11-55).

இப்படி பொதுவாக கேரள முழுவதிலும், குறிப்பாக திரு கொச்சி ராஜ்யத்தில் மலையாளி மக்களின் மனம் பயத்தாலும், தமிழ் மக்களின்மீது ஆத்திரத்தாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு கேசவன் அல்ல பல கேசவன்கள் இவ்வாறு பயங்கரப் பிரசாரம் செய்கிறார்கள்.

தமிழகத்திலும் கொதிப்பு

இங்கு தமிழகத்தில் காமராஜரும், கக்கனும், தேவிகுளம்-பிர்மேடு நம்மிடமிருந்தால் அங்குள்ள தண்ணீரையும் இதர வசதிகளையும் நம் இஷ்டம்போல் உபயோகிக்கமுடியும் என்கிறார்கள். நிதி அமைச்சர், பெரியாற்றின் தண்ணீரைத் தமிழ்நாடு உபயோகிக்க விடுவதுதான் தேசீய நலனை அதிகரிக்கச் சரியான வழி என்று வாதம் புரிகிறார். இது மலையாளிகளின் தேசீய உணர்ச்சியைத் தொடுவதற்குப் பதில், சென்னை சர்க்காரின் சதிவேலை என்று கருதும்படி செய்து மலையாளிகளுக்குத் தமிழர்மீதும், தமிழர்களுக்கு மலையாளிகள் மீதும் பகைமையை வளர்க்க உதவுகிறது. இந்த நிலைமைதான் இன்றைய எதார்த்தம்.

"திராவிடத் தந்தை" வெ.ரா.தேவிகுளம் பீர்மேட்டை வியாஜ்யமாகக் கொண்டு, தமிழ் 'திராவிடர்களை', மலையாள 'திராவிடர்களோடு' போராட அழைக்கிறார். மலையாளிகளை தமிழ் நாட்டிலிருந்து விரட்டிவிட்டே மறுவேலை பார்ப்பேன் என்று போர் முழக்கம் செய்கிறார்.