பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. " ரத்தம் சிந்தியும் சித்தூர் தாலூகாவை தமிழகத்தில் இணைப்போம்" என்று கொழிஞ்சாம்பாறை (கொச்சி-சித்தூர் தாலூகா)யில் நடந்த ' இணைப்பு' மகாநாட்டில் பேசி இருக்கிறார்.

போடி இளைஞர்கள் "தேவிகுளம்-பீர்மேட்டை மீட்கப் போராடி ரத்தம் சிந்தத் தயார்" என்று நிதி அமைச்சரிடம் வாக்குறுதி அளித்தனர்.

சுமுக பைசலுக்கு எங்கள் வழியே சரி

இவ்வாறு, தமிழ்மக்கள், மலையாளி மக்களிடையில் விரோத குரோதம் வேகம் பாய்ந்து நிற்கிறது. எனவே இந்தச் சூழ்நிலையில் நாங்கள் சொல்லும் வழிதான் சுமுகமாகப் பிரச்னையைத் தீர்க்கும். தமிழ், மலையாளி மக்களின் நலன்களை பரஸ்பரம் மதிப்பதுமூலம்தான் சுமுகமான சூழ்நிலை ஏற்படும். எல்லைப்பிரச்னையைத் தீர்க்க நாங்கள் காட்டிய ஜனநாயக அடிப்படைகளை இருதிறத்தாரும் ஒப்புக் கொள்வதின் மூலம்தான் பிரச்னை சுமுகமாகப் பைசல் ஆகும்.

ஏற்கனவே, ராஜ்ய அமைப்புப் பிரச்னையிலும், எல்லை வகுப்புப் பிரச்னையிலும், மொழியைப் பிரதானமாகவும் கிராம அடிப்படையைப் பிரதானமாகவும் கொள்ள வேண்டும் என்ற ஜனநாயகக் கொள்கைகளைப் புறக்கணித்து, சுயதேவைப் பூர்த்தி, தாலூகா அடிப்படை ஆகிய கொள்கைகளைக் கடைப்பிடித்து, காங்கிரஸும், ராஜ்யச் சீரமைப்புக் கமிஷனும், இதர கட்சிகளும் பிரசாரம் செய்து மக்களிடையில், ஒரே குழப்பத்தையும் குரோதத்தையும் வளர்த்து விட்டிருக்கின்றன. ஆகவே நாங்கள் சட்டசபையில் கொடுத்த திருத்தம் அங்கீகரிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது.

மற்றவர்களுக்கு மாறாக நாங்கள் எல்லைப் பிரச்னையில் ஒரு கொள்கையைக் கடைப் பிடிக்கிறோம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது—மற்றவர் ஏற்கட்டும் அல்லது எதிர்த்து நிராகரிக்கட்டும். அது வேறு சங்கதி.

(2) எல்லைகளில் அவசியமான மாறுதல்களோடு, கமிஷன் சிபார்சுப்படி ராஜ்யங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்ற திரு. கருத்திருமன் திருத்தத்தை நாங்கள் ஆதரித்தோம்.

(3) அப்பால் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் எல்லாம் பிரச்சனையைத் தீர்க்காது, சிக்கலை சிடுக்கலாக்கும் திருத்தங்கள், இரு ராஜ்ய மக்களின் நலன்களையும் ஒருசேரப் பாராமல், தங்கள் தங்கள் மாகாணத்திலிருந்து தன்னலத்தோடு கொண்டுவரப்பட்ட திருத்தங்கள். எனவே ஓட்டுக்கு விடுமுன்பே, இந்தத் திருத்தங்கள் எல்லாவற்றின்

மீதும் நடுநிலைமை வகிப்போம் என்று அறிவிப்புச் செய்துவிட்டு, நடுநிலமை வகித்தோம்.