பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

எங்கள் கொள்கையை, பகிரங்கப்படுத்தி யிருக்கிறோம். அதற்காகச் சட்ட சபையில் போராடி யிருக்கிறோம். எங்களுக்கு உடன்பட்டதை ஆதரிக்கிறோம். எங்களுக்கு உடன்பாடில்லாத, தகராறுகளைத் தீர்க்க உதவாத, சுமுகப் பைசலுக்கு விரோதமான எல்லாத் திருத்தங்கள் மீதும், முன் கூட்டியே காரணம் சொல்லி நடுநிலைமை வகித்திருக்கிறோம்,

சமநீதி கிடைக்க

எங்கள் கொள்கையும் கோரிக்கையும் தான் தமிழனுக்கும் மலையாளிக்கும் சமநீதி வழங்கும். ஐக்கிய தமிழகத்தையும் ஐக்கிய கேரளத்தையும், ஒரு அங்குலம் தமிழன் நிலம்கூட மலையாளிக்குப் போகாமலும், ஒரு அங்குலம் மலையாளியின் நிலம் கூடத் தமிழனுக்கு வராமலும், ஜனநாயக ரீதியில் அமைக்கும். தேவிகுளம்-பீர்மேடு தமிழனின் நீதியையும் நியாயத்தையும் கட்டிக் காக்கும். தமிழனையும் மலையாளியையும் அன்று போல் இன்றும் என்றும் சகோதரர்களாக வாழச் செய்யும்.

தமிழர் உரிமையைக் கைவிடவில்லை

ஆகவே நாங்கள் நடுநிலைமை வகித்ததில், ஐக்கிய தமிழகக் கொள்கையை கைவிடவும் இல்லை; தமிழனுக்குரிய நிலம் முழுவதையும் கோரத் தவறவுமில்லை. தேவிகுளம் - பீர்மேட்டுத் தமிழர்களின் நியாயத்திற்கும், உரிமைக்கும் போராடத் தவறி, அவர்களுக்குள் துரோகம் இழைக்கவும் இல்லை என்றே உறுதியாக உணர்கிறேன்.

இனி கம்யூனிஸ்ட் கட்சி சரியான கொள்கையை கடைப்பிடித்ததால், இரண்டு ராஜ்யங்களிலும் ஏற்பட்ட சாதனைகள் எவை என்பதையும், இதர கட்சிகளின் நிலை, அதன் பலன் என்ன என்பதையும் பார்ப்போம்.

மொழிக்கே முதலிடம்

மொழிதான் ராஜ்ய சீரமைப்பில் முதலிடம் பெறவேண்டும் என்று இடை முறியாது நாங்கள் வற்புறுத்தி வந்திருக்கிறோம். சட்டசபை விவாதத்திலும் வற்புறுத்தினோம். சென்னை சட்டசபையிலும் சரி, திரு - கொச்சி சட்டசபையிலும் சரி, இந்தக் கொள்கையை அழுத்தந் திருத்தமாக முன்வைக்க நாங்கள் தவறவில்லை.

தமிழ் மொழி பேசுகிற மக்களை ஆக உயர்ந்த அளவு தமிழ் ராஜ்யத்தில் வாழும்படியாகச் செய்துவிடவேண்டும். அதே பொழுதில் இதர மொழி பேசுகிற மக்கள்-மலையாளிகள், கன்னடியர்கள் தெலுங்கர்கள் ஆகியவர்கள் - தமிழ் ராஜ்யத்தில் வாழுவதை எவ்வளவு குறைந்த அளவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு குறைந்து அளவாகச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் மிகப் பெருவாரி-