பக்கம்:தைத் திங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 தைத் திங்கள்

பாவை செய்து விளையாடுவது அவர்தம் பழக்கம். பாவை விளையாட்டைப் பற்றிச் சங்க நூல்களில் பரக்கக் காணலாம். இதனை,

'தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்
வண்டல் பாவை உண்துறைத் தரீஇத்
திருநுதல் மகளிர் குரவை அயரும்'

(269)

என்னும் அகநானூற்றுப் பாடல் பகுதி அழகாக ஓவியப் படுத்தியுள்ளது. தைத் திங்களில் மகளிர் பாவையை நீர்த்துறையில் வைத்து ஒப்பனை செய்து குரவைக் கூத்து ஆடி மகிழ்கிறார்களாம். இன்னும் இப்பாவை விளையாட்டை,

'பணைத்தோள் குறுமகள் பாவை தைஇயும்'

என்னும் குறுந்தொகைப் பாடல் பகுதியாலும்,

"சுடர்விரி வினைவாய்ந்த தூதையும் பாவையும் விளையாட அரிப்பெய்த அழகமை புனை வினை"

(59)

என்னும் கலித்தொகைப் பாடல் பகுதியாலும், சிலப்பதி காரம் முதலிய நூல்களாலும் நன்கறியலாம். ஈண்டு விரிப்பிற் பெருகும்.

பாவை நோன்பு:

பாவை விளையாட்டு முற்றிய நிலையில் பாவை நோன்பாக மாறும். பாவை நோன்பில் பாவைப்பாட்டும் பங்கெடுத்துக் கொள்ளும். சிலப்பதிகாரத்தில் பாவை விளையாட்டு ஒன்று பாவை நோன்பாக மாறிய வரலாறு காணப்படுகிறது. மதுரையில் கோவலனை யிழந்த கண்ணகி, அங்கிருந்தபடி, தன் ஊராகிய காவிரிப்பூம்பட்டினத்துக் கற்புடைய மகளிரை எண்ணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/107&oldid=1323350" இலிருந்து மீள்விக்கப்பட்டது