பக்கம்:தைத் திங்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

127


இராசி வீடுகளுள் ஞாயிறு, திங்கள், செவ்வாய் முதலிய கோள்களுக்குச் சொந்த வீடு உண்டு. இவற்றுள் அரி மனையாகிய சிம்ம வீடு, ஞாயிற்றின் ஆட்சிக்கு உரிய சொந்த வீடாகும். எனவே, ஞாயிறு ஆட்சி பெற்றிருக்கும் சொந்த வீடாகிய சிம்மம் என்னும் ஆவணித்திங்களைப் புத்தாண்டாகக் கொண்டது மிகவும் பொருத்தமே.

ஞாயிற்றுக்கு மற்ற பதினொரு வீடுகளும் இரவல் வீடுகளாம். பதினொரு திங்கள் காலம் இரவல் வீடுகளில் சுற்றிக்கொண்டிருந்த ஞாயிறு சொந்த வீடாகிய சிம்மத்தில் புகுவதாகிய ஆவணித்திங்களின் தொடக்கத்தை அந்தக்காலத்தில் புத்தாண்டாக மக்கள் கொண்டாடினர். இந்த நாளில் புத்தாடை உடுத்திப் புதுவிழாக் கொண்டாடுவர்; புதுக்கணக்கு போடுவர்; புதுத் தொழில் தொடங்குவர். 'கொல்லம்' ஆண்டு ஆவணியில் தான் தொடங்குகிறது என்பது இவண் குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியம் முதலிய நூல்களிலும் ஆவணியே முதலில் குறிப்பிடப் பட்டுள்ளது.


  "காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
   கூதிர் யாமம் என்மனார் புலவர்"

எனத் தொல்காப்பியமும்.


    "காரே கூதிர் முன்பனி பின்பனி
    சீரிள வேனில் வேனில் என்றாங்கு
    இருமூன்று திறத்தது தெரிபெரும் பொழுதே"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/144&oldid=1323738" இலிருந்து மீள்விக்கப்பட்டது