பக்கம்:தைத் திங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 தைத் திங்கள்


வேண்டிச் சிறிதளவு உணவைப் பிடியாய்ப் பிடித்துக் காகத்திற்கு இடுவார்களாம். இந்தப் பிடி யுணவு 'கன்னிப் பிடி' என்றும் 'கனுப் பிடி’ என்றும் வழங்கப்படுகிறது. தைத் திங்களில் கன்னியர் கொள்ளும் நோன்பைப் பற்றிப் பின்னர் வேறு தலைப்பில் விரிவாகக் காணலாம்.

கன்றுப் பொங்கல்:

சில இடங்களில் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் நடைபெறும். மறுநாள்-தை மூன்றாம் நாள் கன்றுப் பொங்கல் நடைபெறும். பெரிய மாட்டைச் சிறப்பித்தது போலவே சிறிய கன்றையும் போற்றிப் பேண வேண்டும் என்னும் நோக்குடன், தனியே பொங்கல் செய்து படைத்துக் கன்றுக்கு ஊட்டுவர். இதனால் இது கன்றுப் பொங்கல்' என வழங்கப்படுகிறது. இன்று கன்று நன்றாக இருந்தால் தானே இரண்டாண்டு சென்றதும் மாட்டுப் பொங்கல் நடத்த முடியும்? எனவே, கன்றுக்குத் தனி சிறப்பளிப்பது பாராட்டத்தக்கதாகும். சில குடும்பங்களில் தைத் திங்களில் தலை ஞாயிற்றுக் கிழமையன்று கன்றுப் பொங்கல் நடைபெறும்.

விழாவும் விளையாட்டும்:

தை மூன்றாம் நாளன்று பல ஊர்க் கோயில்களில் விழா நடைபெறும். கடவுள் திருமேனி ஊர்வலம் வரும். இஃதன்றிப் பல கலை விழாக்கள் நடைபெறுவதும் உண்டு. கரகம், சிலம்பம், கும்மி, கோலாட்டம், பொய்க்காலிக் குதிரை, கூத்து, நாடகம் முதலியன ஊராரால் நடத்தப் பெறும். இந்தக் காலத்தினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/71&oldid=1323711" இலிருந்து மீள்விக்கப்பட்டது