பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. வைகுண்டப் பெருமாள்

ஈசுவரன் உயிர்களைக் காக்குங்கால் கருணையே வடிவாகவுடைய பெரிய பிராட்டியாரின் கூட்டுறவு மிகவும் இன்றியமையாதது என்பது வைணவ தத்துவம்.

‘(ஈசுவரன்) ரட்சிக்கும்போது பிராட்டி சந்நிதி வேண்டுகையாலே, இதிலே ஸ்ரீ சம்பந்தமும் அ.சந்தேயம்’

என்ற முழுட்சுப்படி வாக்கியத்தால் இதனை அறியலாம். ஆகவே, பிராட்டியுடன் இருக்கும் ஸ்ரீமந்நாராயணனையே சரணம் அடையவேண்டும் என்பது வைணவ சம்பிரதாயமாக வழங்கிவருகின்றது. ஆழ்வார்களுள் சிறந்தவரான நம்மாழ்வார் இதனைக் கருதிதான் ‘’ ‘அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தார்” என்று அறிகின்றோம். ஈசுவரன் சேதநரைக் காக்குங்கால் சேதநரின் அளவற்ற குற்றங்களைக் கண்டோ, அல்லது தனது சுவாதந்தரியத்தாலோ அவர்களைப் புறக்கணிக்கவும் கூடும். அவ்வமயம் ஈசுவரனுக்குச் சேதநரிடம் கருணை பிறக்குமாறு வேண்டியதை வேண்டியாங்குச் சொல்லிப் ‘புருஷகாரம்’ செய்யும் பிராட்டியார் அருகில் இருந்தே ஆகவேண்டும். அப்போதுதான் எம்பெருமான் தடையின்றிக் காத்தல் தொழிலை மேற்கொள்வான்.

கணவருக்குத் தொண்டு பூண்டொழுகும் தம் இயல்பிற் கேற்ப, அவரை மகிழ்வித்தற் பொருட்டு அவர் படுக்கையையும், குழந்தையைக் காக்கும் தம் இயல்பிற்கேற்ப அம்மகவின் தொட்டிலையும் விடாது பற்றி நிற்கும் தாயாரைப் போன்று இருப்பது பெரிய பிராட்டியாரின் நிலை.

1. முமுட்சு - 40. 2. திருவாய் - 6.10:10,

3. புருஷகாரம் - தகவுரை, ஒருவரை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளுமாறு

செய்யும் செயல்.