பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சியில் ஆறும் புறத்தில் ஒன்றும்

75

திருத்தண்கா : இந்தத் திவ்விய தேசம் சின்ன காஞ்சிபுரத்தில் தூப்புல் என்ற பகுதியில் உள்ளது. இந்தத் தலத்து எம்பெருமானைத் திருமங்கையாழ்வார்[1] மட்டிலுமே மங்களாசாசனம் செய்துள்ளார். வேதாந்த தேசிகர் அவதரித்த இடமும் இதுவே. குளிர்ந்த சோலைகளையுடையதால் இத்தலம் ‘தண்கா’ என்று பெயர் பெற்றது போலும். வேளுக்கை ஆளரியை சேவித்த நாம் நேரே இத்திவ்விய தேசத்திற்கு வருகின்றோம்.

திருக்கோயில் சற்றுப் பெரிய கோயிலே. வாகனமண்டபம் தனியாக உண்டு. திருவிழாக் காலங்களில் ததியாராதனை முதலிய செயல்களை மேற்கொள்ளுவதற்கு விசாலமான இடம் உள்ளது. இதையெல்லாம் சுற்றிப்பார்த்துக் கொண்டு திருக்கோயிலுக்கு வருகின்றோம். மேற்கே திருமுகமண்டலங்கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் தீபப் பிரகாசரையும் (விளக்கொளிப் பெருமாள்) மரகதவல்லித் தாயாரையும் வணங்குகின்றோம்.[2] இப்பெருமான்மீது திருமங்கையாழ்வார் பாடிய பாசுரம் தாய்ப் பாசுரமாக அமைந்துள்ளது.

“முளைக்கதிரை, குறுங்குடியுள் முகிலை, மூவா,
மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை, அரங்கம் மேய
அந்தணனை, அந்தணர்தம் சிந்தை யானை
விளக்கொளியை, மரகதத்தை, திருத்தண் காவில்,
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு,
‘வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக!’ என்று
மடக்கிளிளயைக் கைகூப்பி வணங்கி னாளே.”[3]

(முளைக்கதிர்-இளஞ்சூரியன்; மூவா-நித்தியமான; அந்தணர்-வைதிகர்; பாடக்கேட்டு -(கிளி) பாடக்கேட்டு; மட கிளி-அழகிய கிளி)

என்ற பாசுரத்தைச் சிந்திக்கின்றோம். ‘விளக்கொளியை’ என்ற தொடர் இந்தத் தலத்து எம்பெருமானைக் குறிக்கின்றது. விளக்கின் ஒளி எங்ஙனம் பொருள்களை விளங்கச் செய்யுமோ,

  1. பெரி. திரு. 10.1:2; திருநெடுந் - 14.இ
  2. இத்தலத்து எம்பெருமான் பண்டைக் காலத்தில் சயனத்திருக் கோலமாக எழுந்தருளியிருந்ததாகப் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்கியானத்தாலும், அரும்பத உரையினாலும், மற்றும் சில குறிப்புகளாலும் அறியக் கிடக்கின்றது.
  3. திருநெடுந் - 14