பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4



இடுப்பு பெரிதாகி, மனம் குறுகிவிட்டது. முதிர்ந்து போன வயதானதினால் என்பது அல்ல, உடலின் நயம், லயம், மயம் கெட்டு விட்டது என்பதே பொருத்தமாகும்.

நல்ல உடலில்தான் நல்ல மனம், நல்ல குணம் விளங்கும். நல்ல நினைவுகள், நல்ல செயல்கள் என்றும் துலங்கும். நல்ல செயல்கள் நல்ல வாழ்வு முறைகளை அமைத்துத் தரும்.

எனவே, இடுப்புப் பகுதியின் அளவை விரிவுபடுத்தாமல் இருக்க வேண்டுமானால், என்ன செய்வது? என்ற உங்கள் கேள்விக்குப் பதலளித்துப் பாதை காட்டுகிறது இந்நூல்

உடல் உள்ளவரை கடல் கொள்ளாத கவலை வரும் என்பது பழமொழி!

அலை ஒய்வது எப்பொழுது? தலை முழுகுவது எப்பொழுது என்பது போல கவலையெல்லாம் தீர்ந்த பிறகு வயிற்றுப்பிரச்சனை முடிந்த பிறகு, இந்தப்பிரச்சனையைத் தீர்க்க முயலலாம் என்று நினைப்பவர்களே அதிகம்.

நூலில்லாமல் மாலை கோர்க்கப் பார்க்கும் நூதன புத்திசாலிகள் போல, உடலைக் காக்காமலேயே உலக வாழ்ககையை அனுபவிக்க முயல்பவர்கள்தான் அதிகம் இருக்கின்றார்கள்.

"இரவல் சேலையை நம்பி இடுப்புச் சேலையைக் களைந்து எறிந்தவள்" கதைபோல, நாளை வரும் நிறைய இன்பம் என்றும் மனப்பால் குடித்து, இன்றைய வாழ்க்கையை இன்னலோடு கழித்து, உடலைக் கெடுக்கும் மக்களும் தான் இருக்கத்தான் இருக்கிறார்கள்.

என்ன செய்வது? அன்றாடம் அல்லாடி, தள்ளாடி இறுதியிலே ஆடி ஓய்ந்த பம்பரம் போல, அலுத்துக் களைத்துப் அவதியைத் தான் அவர்கள் அடைகின்றனர்.