பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 இந் நூற்பாவிற்கு உரை கூறுவதால் இருவர்தம் உரையினையே ஆராய்வோம். இளம்பூரணர் இந்நூற்பா நோக்கென்னும் உறுப்பு உணர்த்துதல் நுதலிற்று என்று கருத்துக் கூறிக் கொண்டு "மாத்திரை முதலாக அடிநிலை யளவும் நோக்குதலாகிய கருவி நோக்கென்று சொல்லப்படும் என்றவாறு, என்று பொழிப்புரை கூறிவிட்டு, "காரணம் எனினும், கருவி யெனினும் ஒக்கும். நோக்குதல் காரணம் என்பதனை உண்டற் றொழில் என்றாற் போலக் கொள்க" என்று விளக்கம் எழுதி யுள்ளார். அவர் காட்டிய உண்டற்றொழில் என்பது உண்ணுத லாகிய தொழில் என்று இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாகப் பொருள்படும். அது போல நோக்குதலாகிய கருவி என்று கொண்டு நோக்குதலையே கருவியாகக் கொள்ள வேண்டும் என்று இளம்பூரணர் கருதுகிறார். மேலும் அவர், "அஃதாவது யாதானும் ஒன்றைத் தொடுக்குங் காலத்துக் கருதிய பொருளை முடிக்குங் காலும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை. அடிநிலை காறும் என்றதனால் ஒரடிக் கண்ணும் பலவடிக் கண்ணும் நோக்குதல் கொள்க. அஃது ஒரு நோக்காக ஓடுதலும் பலநோக்காக ஓடுதலும் இடை யிட்டு நோக்குதலும் என மூன்று வகைப்படும். அறுசுவை யுண்டி அமர்ந்தில்லா ளுட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று (நாலடியார் -1) இஃது (செல்வநிலையாமை) என்னும் ஒரு நோக்காக ஓடிற்று. அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர்கடுஞ்சொல் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினைதீயார் கேண்மைஎஞ் ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல் (நாலடியார் -172) இப்பாட்டு பலநோக்காகி வந்துள்ளது (பலபொ ருளைக் கூறும் நோக்கமாக வந்துள்ளது என்று பொருள் கொள்ள வேண்டும் போலும்).