பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 தமிழ் 'இனிமையும் நீர்மையும் தமிழ் என லாகும்' என்ற பிங்கல நிகண்டின் நூற்பா "தமிழ் என்ற சொல்லிற்கு இனிமை, நீர்மை என்ற இரண்டு பண்புப் பொருளைக் கூறுகின்றது. இது பண்புப் பொருளைக் குறித்தலால், நால்வகைச் சொல்லுள் உரிச்சொல்லாக வேண்டும். இனிமை என்பது பலவகை இனிமையைக் குறிக்கும். நீர்மை என்பது தன்மை, இயல்பு என்று பொருள்படும். எனவே பலவகை இனிமையையும் தன்மையையும் இயல்பையும் பொருளாகக் கொண்டது தமிழ் என்னும் உரிச்சொல். இடைச் சொல்லெல்லாம் வேற்றுமைச் சொல்லே என்னும் தொல்காப்பிய விதிப்படி இடைச்சொல் எல்லாம் பெயரையும் வினையையும் வேறுபடுத்தவே வரும். 'உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய என்னும் தொல்காப்பிய விதிப்படி, உரிச்சொல் எல்லாம் வேறு படுத்தும் சொல்லாயும் (விசேடணமாயும்) வேறுபடுத்தப்படும் சொல்லாயும் (விசேடியமாயும்) வரும். எனவே தமிழ் என்னும் உரிச்சொல்லும் தமிழ் தழிஇய சாயலவர் (சிந்தாமணி) என்ற இடத்தில் வேறுபடுத்தும் சொல்லாயும் (விசேடணமாயும்) தமிழும் திருவுறை கூடலும் (கல்லாடம்) என்ற இடத்தில் வேறுபடுத்தப்படும் சொல்லாயும் (விசேடியமாயும்) வந்துள்ளவை. தமிழ் என்னும் சொல் முன்னே இனிமை, நீர்மை என்று பொருள்படும்.உரிச்சொல்லாகிப் பின்னர் இனிமையும் நீர்மையும் உடைய மொழிக்குப் (தமிழ் மொழிக்குப்) பெயராகிப் பின்னர் அம்மொழியைப் பேசும் மக்களையும் அம்மக்கள் வாழும் நாட்டையும் குறிக்கின்றது. 'சங்கத் தமிழ் மூன்றும் தா என்ற இடத்தில் தமிழ் என்னுஞ் சொல் தமிழ்மொழியைக் குறிக்க வந்துள்ளது.