பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 "தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானத்து" (புற. -19) என்ற இடத்தே தமிழ் என்னும் சொல் தமிழ் மக்களால் அமைந்த படையைக் குறிக்க வந்துள்ளது. "மண்டினி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்" (புறநானூறு 35) என்ற இடத்திலே தமிழ் என்னும் சொல் தமிழ் நாட்டைக் குறிக்க வந்துள்ளது. "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்உலகம்" எனத் தொல்காப்பியப் பாயிரம் வடக்கின்கண் வேங்கடமலையையும் தெற்கின் கண் தென்குமரியையும் தமிழ்நாட்டிற்கு எல்லையாகக் கூறுகிறது. மேற்காட்டியவாறு பண்பினை, பேச்சு மொழியை, மக்களை நாட்டினை உணர்த்தி நிற்கும் தமிழ் என்னும் சொல்லினைத் தொல்காப்பியர் பெயர்ச்சொல்லாக மட்டும் கருதி, "தமிழென் கிளவியு மதனோ ரற்றே" எனப் புள்ளி மயங்கியலில் புணர்ச்சி விதி கூறியுள்ளார். இச்சொல் தமிழ்மொழியையும் அதனைப் பேசும் மக்களையும் அவர் வாழும் நாட்டையும் குறிப்பதாய்ப் பழைய இலக்கியங் களாகிய புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப் பாட்டு, பரிபாடல் என்பனவற்றில் வழங்குகிறது. இரண்டு பண்பு பிங்கல நிகண்டு தமிழ் என்னும் சொல்லிற்குக் கூறும் இனிமை, நீர்மை என்னும் இரண்டு பண்பும் தமிழ் மொழிக்கு இருத்தலால், தமிழ் என்னும் சொல்லை. அதற்கு உரிய பெயராகத் தமிழகச் சான்றோர் வழங்கி வருகின்றனர். தமிழ் மொழிக்குத் தமிழ் என வழங்கும் இச்சொல் போன்ற பழமையான சொல் வேறு இல்லை. வழுவில்லாத, மரபியல் மாறாத, கருத்துடைய சொற்களால் முறைப்படி அமைந்த தொடர்மொழிகளும், யாப்பியல் முறைப்படி அமைந்து பலவகை இன்னோசையைத் தரும் பாடல்களும் தமிழ் மொழியில் உள்ளன. இன்பமும் பொருளும் அறனும் பயக்கும் அன்பின் ஐந்திணைக் காமத்திணையை உள்ளடக்கிய பொருளிலக்கணப் பகுதியும் தமிழ்மொழியில் உள்ளது. அவற்றால் தமிழ்மொழியின் இனிமைப் பண்புடைமை விளங்கும்.