பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒருசார் பொருட்கூறுகளாகப் பொருந்தும் என்பர் ஆசிரியர்' என்பது மேற்குறித்த தொல்காப்பிய நூற்பாவின் பொருளாகும். இதன்கண் குறிக்கப்பட்ட ஏழு பகுதிகளும் உலக வாழ்க்கையில் மக்கள் பலர்க்கும் உரிய வாழ்க்கைக் கூறுகளாதலின், முதன்மை வாய்ந்த இக்கூறுகளை, ‘ஒன்றன்பகுதி’ என முதற்கண் எடுத்துக் கூறினார் தொல்காப்பியனார். இச்சூத்திரத்தில் வந்துள்ள அமரர் என்னுஞ் சொல், ‘அமரர்’ என்பதன் அடியாகப் பிறந்த பெயராய், ‘அமர்’ செய்தலையே தமது தொழிலாகக் கொண்டு வாழும் தறுகண் மறவரைக் குறித்து வழங்குந் தனித்தமிழ்ச் சொல்லாகும். இந்நுட்பம்,

      "எமரனாயின் இறைகொடுத் தகல்க              
        அமரனாயின் அமைவொடு நிற்க”
                               (பெருந்,-உஞ்சைக்'விழாக்கொண்டது)

என வரும் பெருங்கதைத் தொடரால் இனிது புலனாதல் காணலாம். அமர்புரியும் படைவீரரைக் குறித்து வழங்கும் 'அமரர்’ என்னும் இச்சொல், அம்மறவர் போர்க்களத்து உயிர் கொடுத்து விண்ணுல கெய்திய நிலையில் கல் நிறுத்தித் தெய்வமாக வைத்துப் போற்றப் பெறும் புகழுருவினை எய்திய பின்னர்த் தேவர் என்ற பொருளிலும் வழங்கப் பெறுவதாயிற்று எனக்கருத வேண்டியுள்ளது,

     'ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும்
      செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்ணும்’
                                              (தொல்-கற்பியல்-5)
எனப்பின்வரும் கற்பியற்சூத்திரத்தில் அமரர் என்னும் இச்சொல் போரில் உயிர்துறந்து தெய்வமாய் நின்ற படை மறவர்களைக் குறித்து வழங்கியுள்ளமை இங்கு  ஒப்புநோக்கியுண்தற்குரியதாகும்,

“போர் மறவர் பாற் சென்று அமைவனவாக இப்புறதினையியலில் விரித்து விளக்கப் பெற்ற வெட்சி முதல் காஞ்சியிறாகவுள்ள புறத்திணை யொழுகலாறுகள் ஆறினையும் பொருளாகக் கொண்டு பாடப் பெறும் அறுவகைப் பகுதிகளே அமரர்கண் முடியும் அறுவகை யெனப்பட்டன” என நாவலர் பாரதியார் கூறும் உரைவிளக்கமே ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்கும் தொல்

20

20