பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உவமையியல்-நூற்பா ௨

க௫

பேராசிரியம்

இஃது எய்தியது இகந்துபடாமற் காத்தது; நான்கென மேல் (276) தொகை கொடுத்தமையின் அவை வேறு வருத லெய்தியதனை அவ்வாறேயன்றி விரவியும் வரும் என்றமையின்.

(இ - ள்) அந்நான்கும் ஒரு பொருளோடு ஒரு பொருள் உவமஞ்செய்யும் வழி ஒன்றேயன்றி இரண்டும் மூன்றும் விரவியும் வரும் அதன் மரபு (எ - று)."

  "செவ்வா னன்ன மேனி" (அகம். கடவுள் வாழ்த்து) என வண்ணம் ஒன்றுமே பற்றி உவமஞ்சென்றது.
  "அவ்வான்,
   இலங்குயிறை யன்ன விலங்குவால் வையெயிற்று"
                                     (அகம். கடவுள் வாழ்த்து)

என்றவழி, வண்ணத்தோடு வடிவுபற்றி உவமஞ்சென்றது.

   "காயா மென்சினை தோய நீடிப்
    பஃறுடுப் பெடுத்த வலங்குகுலைக் காந்த 
    ளணிமலர் நறுந்தா தூதுந் தும்பி 
    கையாடு வட்டில் தோன்றும் 
    மையாடு சென்னிய மலைகிழ வோனே’’ (அகம், 108)

என்புழி, ஆடுதற் றொழில்பற்றியும் வடிவுபற்றியும் வண்ணம் பற்றியும் வந்தது. பிறவுமன்ன. -

'மரபின' வென்றதனான் அவை அவ்வாறு விராய்வருதலும்

மரபே; வேறு வேறு வருதலே மரபெனப்படாதெனக் கொள்க. (உ)
   இஃது உவமத்திற்கு ஆவதோர் மரபுணர்த்துகின்றது.

(இ.ள்) ஒருபொருளோடு ஒரு பொருளை உவமிக்குங்கால் மேற்குறித்த வினை முதலிய நான்கனுள் ஒரோவொன்றேயன்றி இரண்டும்மூன்றும் கலந்து ஒத்துவருதலையும் இலக்கணமாகவுடையன அவ்வுவமம் என்பர் ஆசிரியர் (எ-று).

1. உவமையொடு பொருளிடையேயமைதற்குரிய பொதுத்தன்மைகளாய வினை, பயன், மெய், உரு என்னும் நாகான்கும் ஒவ்வொன்றே வருதலன்றி இரண்டும் மூன்றும் கலந்து வருதலும் உவமையின் மரபாம் என்றவாறு, விரவுதல் கலத்தல்