உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

தொல்காப்பியம்-நன்னூல்


மெனக் கூறப்பட்டது. இசையிற்றிரிதலென்பது ஒலியெழுத்திற் கெனவும் எழுத்துக் கடனில வென்றது வரிவடிவிற்கெனவும் இளம்பூரணர் கூறுவர்.


5. தொகைமரபு

மேல் மூவகை மொழியும் நால்வகையாற் புணர்வுழி மூன்று திரிபும் ஓர் இயல்பும் எய்தி, வேற்றுமை அல்வழியென இருபகுதியவாகி, எழுத்தும் சாரியையும் மிக்குப் புணருமாறு இதுவென்று உணர்த்தினார். அப்புணர்ச்சிக்கட்படும் இலக்கணங்களாய்த் தொன்றுதொட்டு வரும் இலக்கணமரபுகளை இவ்வியலின்கண் தொகுத்துணர்த்துதலின், இது தொகை மரபு என்னும் பெயர்த்தாயிற்று. உயிரீறும் புள்ளியீறும் மேலை அகத்தோத்தினுள் முடிக்கும்வழி ஈறுகள் தோறும் விரிந்து முடிவனவற்றை ஈண்டு ஒரோவோர் குத்திரங்களால் தொகுத்து முடிபு கூறுவர் ஆசிரியர்.

கசதப முதலிய மொழிமேற் றோன்றும்

மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான் ஙஞநம வென்னும் ஒற்றா கும்மே

அன்ன மரபின் மொழிவயி னான். (தொல். 43)

இஃது உயிர் மயங்கியலையும் புள்ளி மயங்கியலையும் நோக்கியதோர் வருமொழிக்கருவி கூறுகின்றது.

(இ-ள்) உயிரீற்றினும் புள்ளியீற்றினும் இருவழியும் கசதபக்களை முதலாகவுடைய மொழிகளின்மேல் தோன்றும் மெல்லெழுத்தினது இயல்புகடறின், அம்மெல்லெழுத்து மேற்சொல்லு முறைமையான் கசதபக்களுக்கு முன் நிரனிறை வகையானே ஙஞநம என்னும் ஒற்றாகும்; அங்ஙனம் மெல்லெழுத்து மிகுதற்குரியனவாகிய மொழிகளிடத்து எ-று.

(உ-ம்) விள + கோடு = விளங்கோடு ; செதிள், தோல், பூ எனவரும்.

பின்னர் உயிரீற்றினும் புள்ளியீற்றினும் வல்லெழுத்து வருவழி மெல்லெழுத்து மிகும் என விதிக்கும் இடங்களில் எல்லாம் இவ்வல்லெழுத்து முன்னர் இம்மெல்லெழுத்து மிகும் என்னும் இயல்பு விளக்கப் பெறாமையின், கசதபமுன் முறையே அவற்றின் கிளையொற்றாகிய ஙஞநம மிகும் என ஈண்டுக் கருவி செய்து கொண்டார்.