உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

பொருந்தக் கற்றுப் புரைதட வுணர்ந்தோர்
நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்’

எனவரும் பன்னிருபடலப் பாயிரத்தானும்,

மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்
தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதற்
பன்னிரு புலவரும்.’

எனவரும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரத்தானும் புலனாதல் காணலாம்.

 இவர்க்கு வழங்குந் தொல்காப்பியரென்னும் பெயர், பல்காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் எனப் பண்டைத் தமிழ்ப் புலவர்க்கு வழங்கும் குடிவகை குறிக்கும் பெயர்போலப் பழமையான காப்பியக்குடியிற் பிறந்தவர் என்பதுபட வழங்கியதாகலாம். இவரைக் காவிய கோத்திரத் தவரெனக் கொண்டு சமதக்கினியின் புதல்வரான பரசுராமரின் உடன்பிறப்பாளரென ஒரு சிலர் கூறுதற்குப் பொருந்திய ஆதரவு கிடைக்கவில்லை.
 வடக்கே வேங்கடமலைக்கும் தெற்கே குமரியாற்றிற்கும் இடைப்பட்ட தமிழ்மொழி வழங்கும் நாட்டின் கண்ணே பயிலப்பெறும் உலக வழக்கையுஞ் செய்யுள் வழக்கையும் அடிப்படையாகக் கொண்டு அவற்றோடு அகத்தியர் முதலியோராற் செய்யப்பட்ட முந்திய நூலினையும் கண்டு எழுத்திலக்கணத் தினையும் சொல்லிலக்கணத்தினையும், பொருளிலக்கணத்தினையும் ஆராய்ந்து இவற்றின் இலக்கணங்களை ஆசிரியர் தொல்காப்பியனார் தொகுத்துக் கூறினாரென இந்நூற் பாயிரங் கூறுகின்றது. எனவே தொல்காப்பியமென்னும் இந்நூல் தமிழ்நாட்டின் உலக வழக்கையுஞ் செய்யுள் வழக்கையும் தமிழ்த் தொன்னுல்களையும் அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தொல்காப்பியனாரால் செய்யப்பெற்ற தனித் தமிழ் இயல்நூலென்பது போதரும்.
 இடைச்சங்க காலத்துப் பாண்டியர் தலைநகர் கபாடபுரம் என்றும், அக்காலத்தவர்க்கு இலக்கணநூல் தொல்காப்பியமென்றும் இறையனார் களவியலுரை கூறுகின்றது. வடமொழியில் ஆதிகவியாகிய வான்மீகியார் இராமாயண காலத்திலே பொருநையாறு கடலொடு கலக்குமிடத்தே பாண்டியர் தலைநகர் இருந்ததாகக் குறித்தவர்,  

அதனைக் கபாடம் என்ற சொல்லால் அறிவித்துப் போதலின், மேற்காட்டிய இறையனார் களவியலுரைகாரர் கூற்று மெய்ப்பிக்கப் படுகின்றது. எனவே இடைச் சங்ககாலத்தார்க்கு இலக்கணமாகிய இந்நூல் இராமாயண காலத்திற்குச் சிறிது முன்னரோ ஒத்த காலத்திலேயோ இயற்றப்பட்டிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலனாகும்.

 இந்நூலாசிரியர் ‘ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்’ எனப் புகழப்படுதலால் வடமொழியின் ஆதியிலக்கணமாக இந்திரனாற் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணத்தை யுணர்ந்து வடமொழியினும் வல்லராயினாரெனக் கூறுவர்.

ஆசிரியர் நூல் செய்கின்ற காலத்து வடநாட்டாருள் ஒருசிலர் தமிழ்நாட்டிற் குடியேறினரென்பதும். ஆதலால் வடமொழியினின்றும் ஒரு சில சொற்கள் தமிழ்மொழியிற் கலந்தனவென்பதும், இந்நூலில் வரும் ஒரு சில வடசொல்லாட்சி கொண்டும் வடமொழிச் சொற்கள் தமிழ் ஒலிக்கேற்பத் தமிழில் வந்து வழங்குதற்கெனச் சொல்லதிகாரத்தில் இந்நூலாசிரியர் கூறிய விதிகொண்டும் துணியப்படும். அவ்வாறே தமிழ்மொழிச் சொற்களுள்ளும் முத்து, மணி, ஆணி என்றற்றொடக்கத்துச் சொற்கள் பல பண்டைய வடமொழியிற் கலந்தனவெண்பர் மொழி நூலாராய்ச்சியாளர். இங்ஙனந் தமிழர் ஆரியர் கலப்பால் இவ்விருமொழிச் சொற்களும் மயங்கிவரப் பெறினும், வடமொழியினின்றுந் தமிழ்மொழியி