உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்மரபு

53


   (இச் சூத்திரத்தில் ஆசிரியர் பவணந்தியார் வினாவாக வருமெனக்கூறிய ஆ, ஏ, ஓ ஆகிய ஈற்று வினாவில் ஏமுதலினும் வருமெனக் குறிப்பிட்டது, ஏது என்பது முதலாக வரும் பிற் காலத்து வழக்கு நோக்கியாதல் வேண்டும்)
   பவணந்தியார் கூறியவாறு எகரம் வினாவாய் வருமென்றால், அ, இ, உ என்றவற்றைச் சுட்டெனக் குறிப்பிட்ட ஆசிரியர் எகரத்தையும் வினாவென அடக்கிக் கூறியிருப்பர். உயிர்மயங்கியலில் அ, இ, உ என்றவற்றிற்கு அவ்வவ்வீற்றின்கண் புணர்ச்சி விதி கூறிய ஆசிரியர், எகரம் தனி நின்று வினாப் பொருளுணர்த்துமாயின் அதனையும் எகர வீற்றுள் எடுத்துக் கூறிப் புணர்த்திருப்பர். அவ்வாறெடுத்தோதாமையானும் “சுட்டுமுதல் வயின்” என்றாற் போல எகர முதல்வயின் என எழுத்தேபற்றிக் கூறி எகர இகரம் முதலியவைகளோடு கூடி ஒரு சொல்லாகிய நிலையிலேயே, அவ்விடைச் சொல்லை வினாவெனக் குறிப்பிட்டுச் சேறலானும், எகரமொன்றே மொழி முதற்கண் தனித்து நின்று வினாப் பொருளுணர்த்திற்றென்றல் தொல்காப்பியனார்க்கு உடன்பாடன்று என்க.
   இனி அஃறிணைப்பன்மைப் பெயராய் நின்று வினாப் பொருளுணர்த்தும் யா என்னும் வினாப் பெயரினை மொழி முதலினின்றும் வினாப்பொருளுணர்த்தும் வினா எழுத்தாகக் கொண்டு, இரு திணையைம்பாற் பெயரினும் வினையினும் பின்னின்று வினாப்பொருளுணர்த்தும் எழுத்துக்களோடு இயைத்துரைத்தல் பொருந்தாது. அன்றியும் யாவொன்றனை வினா வெழுத்தாகக் கொண்டு அதனோடு துவ்விகுதியும் வைவிகுதியும் சேர்ந்து யாது, யாவை என ஆயிற்றெனக் கொள்ளின், யா என்பதனை அஃறினைப் பன்மைப் பெயராகக் கொண்ட தொல்காப்பியனார் கருத்தோடு முரணி, யா என்பது ஐம்பாற்கு முரித்தெனப் பொருள்படுதலானும், ஐம்பாற்குமுரிய யாவென்பது இலக்கியங்களிலும் வழக்கிலும், அஃறிணைப் பன்மைப் பொருளுணர்த்தி நிற்றலானும் ஆசிரியர் கருத்து அஃதன்றென்க.
   இனி, எ, என்பதனைத் தனியே வரும் வினாவெழுத்தாகக் கொண்டு எப்பொருள் என்றும், உயர்திணைக்கண் அன் விகுதி பெற்று எவன் என்று ஆண்பாலுணர்த்தியும் நிற்குமெனக் கொள்வர் பிற்காலத்து உரையாசிரியர்கள்.