பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிமரபு

77



வகரப் புள்ளியும் ஒளகாரம்போல வருமெனக் கொள்க. ஒளவை-அவ்வை எனக் கண்டு கொள்க’ என்பர் இளம்பூரணர். இவ்வெழுத்துப் போலிகளை நன்னூலார்,

     அம்மு னிகரம் யகர மென்றிவை 
     எய்தின் ஐயொத் திசைக்கும்; அவ்வோடு 
     உவ்வும் வவ்வும் ஒளவோ ரன்ன. (நன். 125)

என்பதனாற் றொகுத் துரைத்தார். இச்சூத்திரத்திற்கு அகரத்தின் முன் இகரமும் யகரவொற்றும் வருமாயின் ஐகாரம் போன்றொலிக்கும். அகரத்தோடு உகரமும் வகர வொற்றும் வருமாயின் ஒளகாரம் போன்றொலிக்கும் எனப் பொருள் கூறி, (உ-ம்: அ இசஐ; அய் = ஐ; கஇ=கை, கய்=கை அஉ=ஒள; கஉ=கெள; என உதாரணமுங் காட்டினர் சங்கர நமச்சிவாயர்.

   மேலைச் சூத்திரத்தில் தொல்காப்பியனார் அகரத்தின் முன் வகரமெய் வந்து ஒளகாரம்போல வொலிக்குமெனக் கூறாதிருக்கவும் நன்னூலார் அதனை இச்சூத்திரத்திற் கூறியது, “மெய் பெறத் தோன்றும் என்றதனால் வகரப்புள்ளியும் ஒளகாரம் போல வருமெனக் கொள்க’ என அக்குத்திரத்திற்கு உரையாசிரியர் உரைத்த சிறப்புரை கருதியென்க. இவ்விதி தொல்காப்பியனார்க் குடன்பாடாயின்,
     அகரத் திம்பர் வகரப் புள்ளியும்
     ஒளவெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும், 

என்றொரு சூத்திரம் செய்திருப்பார். - அவ்வாறுரையாமை யொன்றே, இவ்விதி அவர்க்கு உடன்பாடன்றென்பதைப் புலப்படுத்தலானும், பிறப்பியலில்,

     “உ, ஊ, ஒ, ஓ, ஒள வென விசைக்கும்
     அப்பா லைந்தும் இதழ்குவிந் தியலும்” 

எனக் கூறுமாற்றால் இதழ் குவிதலாற் பிறக்கும் ஒளகார வீற்றோசைக்கும் தொழிற்பாட்டுக்கும் “பல்லிதழியைய வகரம் பிறக்கும்” என்றதனால் மேற்பல்லைக் கீழிதழ் இயையப் பிறக்கும் வகரத்தின் ஒசைக்கும் தொழிற்பாட்டுக்கும் பெரியதொரு வேறு பாட்டினை ஆசிரியர் விரித்துரைத்தலானும், அகரமும் வகரமுங் கூடி ஒள என ஒலித்தல் தொல்காப்பியர் காலத்து வழக்கன் றென்பது புலனாகும். அங்ஙனமாகவும் வ. உ. சிதம்பரம்பிள்ளை யவர்கள், தாம் பதிப்பித்த தொல்காப்பிய எழுத்ததிகாரம் இளம் பூரணருரையில்,