பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை உலக மக்களது வளமிக்க நல்வாழ்வுக்கு வழிகாட்டியாக விளங்குவோர் புலவர் பெருமக்களாவர். அவர்களது புலமைத் திறத்துக்குரிய நிலைக்களமாக விளங்குவது அவர்களாற் பயிலப் பெற்று வழங்கும் மொழியாகும். நிலத்தினது வளத்தினை அதன் கண் தோன்றிவளரும் நெல் முதலிய பயிர்கள் நன்கு புலப் படுத்துவதுபோன்று, ஒரு நாட்டில் வாழும் மக்களது அறிவின் திறத்தை இனிது புலப்படுத்துவது அவர்களாற் போற்றிவளர்க்கப் பெறும் தாய்மொழியேயாகும். மக்கட்குலத்தார் தமது உள்ளக் கருத்தை மற்றவர் உணர உணர்த்தியும், பிறரது மனக்கருத்தைத் தாம் தெளிய உணர்ந்தும் இவ்வாறு வாழ்க்கைத்துறையில் ஒருவர் மற்றவர்க்குத் துணை நின்று வளம் பெறுதற்குரிய சிறந்த கருவியாக விளங்குவது மொழி. மொழியின் வாயிலாக அறிவின் ஒட்பமும் அதன் பயனுக வினைத்திட்பமும் நற்பொருளாக்கமும் வளர்ந்து சிறத்தல் இயல்பு. இம்முறையால் மொழியின் துணை கொண்டு மக்களது நல்லறிவினையும் செயலாற்றலையும் நாட்டின் வளங்களையும் மேன்மேலும் வளர்க்க வல்ல பெரியோர்களே நல்லிசைப் புலவரெனச் சிறப்பித்துப் போற்றப்பெறுவர்: உலகியற் பொருள்களையும் மக்கள் வாழ்க்கை இடையறவின்றி நெடுங்காலம் தொடர்ந்து நிகழ்தற்குரிய நெறிமுறைகளையும் நுண்ணிதின் ஆராய்ந்து தாம் கண்டுணர்ந்த அரியஉண்மைகளைப் பாட்டாகவும் உரையாகவும் சுவைபெற அமைத்து மக்களுக்கு அறிவும் இன்ப மும் வழங்குதல் இப்புலவர் பெருமக்ககளது தொழிலா தலின், இவர்களை அறிவுக்கொடைப் பெருவள்ளல்கள் எனப் போற்றுவர் பெரியோர். இத்தகைய புலமைச் செல்வர்களால் இயற்றப் பெற்றுக் கற்போரது அறிவினை விளங்கச் செய்யும் ஆற்றலும் அழகும் அமையப்பெற்ற அரிய நூல்களே நன்மக்களால் உயர்ந்த இலக்கியங்களாக மதித்துப் போற்றப் பெறுகின்றன.