பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

யூகித்துச் சொந்த பாடங்களால் நிறைவுறுத்தவுங் கூடும். படியெடுப்பவர் பல நூற்றாண்டு பயிற்சி உள்ளவராயின் இந்நூலின் தொடர்களைத் தம்மையறியாமலே பிறநூற்றொடர்களால் சிறிது மாற்றியெழுதி விடலாம்.

ஒருவர் சொல்லக் கேட்டு எழுதுங்கால், தாமே பார்த்து எழுதுவோர் செய்யக்கூடிய மாற்றங்கள் பலவும் சொல்பவர் எழுதுபவர் ஆகிய இருவர் மாட்டும் நிகழும். மேலும் கேட்டெழுதுவோர் பிறழக் கேட்டலாலும், சந்தி சேர்த்தும் பிரித்தும் சொல்பவர் சொல்ல. எழுதுபவர் தாமும் பிரித்தும் சேர்த்தும் தம் கருத்தின் வண்ணம் எழுதக் கூடுமாதலானும் பாடவேறுபாடுகள் தோன்றலாம். சொல்லுங்காலும் எழுதுங்காலும் ஒர் எழுத்துச் சேர்த்தல், விடுதல், எழுத்து அல்லது சொல்லை முன்பின்னாக மாற்றிவிடுதல் ஆகியவையும் நிகழ்தலுண்டு.

ஆசிரியர் பாடஞ் சொல்லுங்கால் தம்மையறியாமலே புதுப்பாடங்களைக் கூறின் மாணாக்கர் அவற்றையும் குறித்துக் கொள்ளின் அவை புதுப்பாடமாக உருவெடுக்கலாம். "பொருளில் கானும் சிக்கல்கள், செய்யுளமைப்பில் பிழை, பொடிந்த இடங்களை நிரப்பும் முயற்சி, மத வேறுபாடு ஆகியன ஏடுகளில் பாட வேறுபாடுகள் எழுவதற்குரிய காரணங்களில் முக்கியமானவை" என்றும், "எழுத்தர் வெறுக்கும் செய்திகள் விடுபடுவதும் உண்டு" என்றும், "இடைச் செருகல்கள் புத்தி பூர்வமாகச் செய்யப்படும் மாறுதல்களாகும்" என்றும் முதுமுனைவர். வஅய் கப்பிரமணியம் பிரதிபேத ஆராய்ச்சி என்ற நூலின் முகவுரையில் (பக். 12) கூறியுள்ளார். இக்காரணங்களால் பாடவேறுபாடுகள் காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம், ஏட்டுக்கு ஏடு பெருகிக் கொண்டே போகும் என்பது ஒருதலை.

மிகைப் பாடல்களுடன் கம்பராமாயணச் செய்யுட்டொகை 11843 என்று தெரிகிறது. 3,13,489 பாடவேறுபாடுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயணப் பதிப்பில் தரப்பெற்றுள்ளன. திரு. சுவாமிநாத பண்டிதர் பதிப்பின் மறுபதிப்பான காசிமடத் தேவார அடங்கன்முறையில் நூற்றுக்கணக்கான பாடவேறுபாடுகள் அடிக்குறிப்பாகத் தரப்பெற்றுள்ளன. பத்தாம் திருமுறையாகிய திருமந்திரம் மூவாயிரம் பாடல்களையுடையது. ஆனால் இந்நாளில் அதிகப்படியான பாடல்களுடன் பாடவேறுபாடுகள் மிக்குக் காணப்பெறுகிறது. வெ. பழனியப்பன் தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள் என்ற தம் நூலில் நற்றிணையில் 666, குறுந்தொகையில் 1480. ஐங்குறுநூற்றில் 521. பதிற்றுப்பத்தில் 273, பரிபாடலில் 559. கலித்தொகையில் 1206, அகநானூற்றில் 1466. புறநானூற்றில் 1500 என்று கணக்கிடுவார். அவர் கூற்றின் வண்ணம் எட்டுத்தொகை நூல்களின் மொத்த பாடபேதத் தொகை 7669 ஆகிறது. அவர் கணக்கின்படி தொல்காப்பியத்தில் 542 நூற்பாக்களில், 894 இடங்களில், 1040 பாடவேறுபாடுகள் உண்டு. (பக். 14, 86)