பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தின் அமெரிக்கா' எனப் பெயர் வழங்கப் படுவதை ஈண்டு நினைவில் கொள்ளவேண்டும். மற்றும், இலத்தீனிலிருந்து இத்தனை மொழிகள் பிறந்தோ — பிரிந்தோட—திரிந்தோ தோன்றியும், இலத்தீன் மொழி அழியாமல் இன்றும் இருப்பதை எண்ணத்தில் நிறுத்தவேண்டும்.

சமசுகிருதம்:

இதேபோல, வட இந்தியாவில், சமசுகிருதத்திலிருந்து பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளும் இப்போது, வழங்கிப் பெறும் பல வட இந்திய மொழிகளும் பிறந்தோ பிரிந்தோ — திரிந்தோ தோன்றியும், சமசுகிருத மொழி அழியாமல் இன்றும் இருப்பதையும் ஈண்டு நினைவுகூர வேண்டும்.

பல மொழிகட்கு முதன்மைத் தாய்மொழிகளாகிய இலத்தீனும் சமசுகிருதமும் அழியாமல் இன்றும் இருக்கும் போது, திராவிட மொழிகளின் முதன்மைத் தாய்மொழி எனக் கற்பனை செய்யப்படும் தொல் திராவிட மொழி மட்டும் எவ்வாறு அழிந்துபோயிருக்கக்கூடும்? அந்தத் தொல் திராவிட மொழி இன்றும் இருக்கிறது. ஆனால், இலத்தீனும் சமசுகிருதமும் பேச்சு வழக்கில் இல்லாமல் எழுத்து வழக்கில் மட்டும் உள்ளன. தொல் திராவிட மொழியோ, பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு ஆகிய இரண்டிலும் உள்ளது என்னும் உண்மையை, தெளிவு பெறாத மொழியியலார் சிலருக்குத் தெளிவு படுத்தவேண்டும். இந்த இலக்கை அடைவதற்காக, பெருவாரியாக வழங்கப்பெறும் திராவிட மொழிகளைப்பற்றிச் சிறு குறிப்புகள் தரவேண்டும். எனவே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளைப் பற்றிய சிறு குறிப்புகள் இனி வருமாறு: