பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15. கொடை வள்ளல் நாயுடு
வாரி வழங்கிய பட்டியல்!

சங்க காலப் பாரி, பறம்பு மலையில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன் அவனிடம் குன்றுகள் போல செல்வம் குவிந்திருந்தது. அதனால், அவனைத் தேடி நாடி ஓடி வந்த பானர்களுக்கும், புலவர்களுக்கும், கவிஞர்களுக்கும் வாரி வழங்கி வறுமையைப் போக்கிப் பாரி என்ற பெயரைப் பெற்றான் தமிழ் வரலாற்றில்!

வாடிய பயிர்கள் கண்ட போதெல்லாம் வாடிய கருணை மனம் கொண்ட வடலூர் வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளைப் போல, படர முடியாமல் தவித்து அலைமோதிக் கொண்டிருந்த முல்லைக் கொடியைக் கண்ட வள்ளல் பாரி, தனது தேரையே அதற்குத் தானமாக வழங்கி, அந்த முல்லைக் கொடியை அதன்மேல் படர விட்டக் குறுநிலக் கோமான் பாரி, ஓரறிவு உயிர் மீதும் கருணையே வடிவமாகத் திகழ்ந்தவர் ஆவார். அதற்கான சில சம்பவங்களை இனிப் படிப்போம்.

கோவை திரு. ஜி.டி. நாயுடு அவர்கள், வள்ளல் பாரியைப் போல ஒரு குறுநில மன்னர் அல்லர் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சாதாரணக் கல்வி கூட கற்காதவர். தனது வாழ்க்கையில் பல இன்னல்களையும், துன்பங்களையும், துயரங்களையும் ஏற்றவர். ஆனால், ஒயாத உழைப்பாலும், தளராத உள்ளத்தாலும், இரவு-பகல் என்று பாராமல் உழைத்தவர்.

எளிய குடும்பத்தில் பிறந்த ஜி.டி. நாயடு அவர்கள், மக்கள் மனதைக் கவரக் கூடிய அளவுக்கு முன்னேறி, உலக நாடுகளைப் பலமுறைச் சுற்றி, அந்தந்த நாட்டு மக்கள் பொருளாதாரத்