பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

21


சிறுவன் துரைசாமி மீண்டும் தான் பிறந்த ஊரான கலங்கல் கிராமத்துக்கு வந்து தந்தையின் பாதுகாப்பிலே இருந்தார்.

மைத்துனர் ராமசாமி கூறியதைக் கோபால்சாமி கேட்டவுடன் மகன்மீது கோபம் கொண்டு அவனைத் தோட்டத்து வீட்டிலேயே தங்க வைத்து, பருத்தி, புகையிலை விவசாயத்தைக் கற்றுக் கொடுத்து, பயிரைப் பாதுகாத்துக் கொண்டு தோட்டத்தை விட்டு வெளியே எங்கும் போகக் கூடாது என்றும் கண்டித்தார்.

விவசாயம் செய்ய பயிற்சி பெற்றார்!

கிராமத்தை விட்டுச் சிறிது தூரம் தள்ளி தோட்டம் இருந்த தால், சிறுவன் தனிமையாகவே இருக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

காலையில் எழுந்ததும் துரைசாமி, பருத்தி, புகையிலை வயல் வெளிகளில் மண் வெட்டுவார்; பிறகு மாடுகளை மேய்ப்பார்; வயற் காட்டில் உள்ள களைகளை எடுப்பார்; தோட்டத்தைக் காவல் காப்பார்; இவற்றைத் தினந்தோறும் செய்து, விவசாய வேலைகளைச் செய்வார்.

இவ்வளவு வேலைகளையும் செய்து வரும் தனது மகனுக்கு உதவியாக, அவன் தந்தை ஒரு காவலாளியை நியமித்தார். அவன் துரைசாமி செய்து வந்த பணிகளை எல்லாம் பொறுப்பேற்று செய்து வந்ததால், ஓய்வு நேரம் அதிகமாகக் கிடைத்ததை வீணாக்காமல், தமிழ் நூல்களைக் கற்று அறிவை மேலும் வளர்த்துக் கொண்டார் துரைசாமி. உண்ணுவதும், உறங்குவதும், புதுப் புதுத் தமிழ் நூற்களை வாங்கிப் படிப்பதும் அந்த வாலிபனின் அன்றாட பணியாக இருந்தன.

மாடுகள் மீதுள்ள கருணை:
வைக்கோல் போரில் தீ!

தீபாவளி திரு விழாவைக் கலங்கல் கிராம மக்கள் எப்போதும் விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். அதனால், கோபால் சாமியும், மகனைத் தனது ஊரிலுள்ள வீட்டுக்கு அழைத்துவந்து தீபாவளியை விமரிசையாகக் கொண்டாட விரும்பியதால், தோட்ட வீட்டிலிருக்கும் மகனை அழைத்து வர அவர் ஓர் ஆளை அனுப்பி இருந்தார்.