கலைஞரின் சட்டமன்ற உரைகள்
19
அப்படி என்ன தமிழகம் பின்தங்கிக் கிடக்கிறதா என்று கேட்பவர்களுக்கு சில புள்ளிவிவரங்களை என்னால் தர முடியும். பம்பாய் மாநிலத்தில் இருப்பவர்களில் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 43. அவர்களால் பாதுகாக்கப்படவேண்டியவர்கள் 57 பேர்கள். தமிழகத்தில் சம்பாதிப்பவர்கள் 31. அந்த 31 பேர்களால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் 69 பேர்கள் இருக்கிறார்கள். இதை மறந்துவிடக் கூடாது. தமிழகத்தில் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கிற விவசாயியின் ஆண்டு வருவாயை விட வட மாநிலங்களிலுள்ள உழவனின் வருவாய் ஏறத்தாழ 200 ரூபாய் அதிகமாக இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மூன்றாவது திட்ட இறுதியில் தொழில்துறை வருமானம் இந்தியாவில் கிழக்குப் பகுதியில் 54.60 சதவிகிதமாக உயரும். அகில இந்திய தொழில்துறை வருமானமும் 34.94 சதவிகிதமாக உயரும். ஆனால் தென்னகத்தில் 17.90 சதவிகிதம்தான் இருக்கும். இது சமநிலையில்லாத முறையில் பிரதேசங்களை வளர்ப்பதன் போக்கு. இது இன்ஸ்டிட்யூட் ஆப் பப்ளிக் ஒப்பினியன் பொருளாதார அறிக்கையில் இருப்பதாகும்.
குறிப்பாக பிரதேச வருமானம் எப்படியிருக்கிறது என்று பார்ப்போமானால் 1950-51 லிருந்து 1965-66 வரை உள்ளதை கவனிப்போம். ஆந்திராவை எடுத்துக்கொண்டால் 73.31 சதவிகிதம், கேரளாவில் 63.53 சதவிகிதம், தமிழகத்தில் 79.61 சதவிகிதம், மைசூரில் 82.01 சதவிகிதம், ஒரிசாவில் 229.37 சதவிகிதம், பஞ்சாபில் 189.75 சதவிகிதம், டில்லியில் 177.03 சதவிகிதம் இருக்கின்றன. தமிழகத்தின் வருமானம் 79.61 சதவிகிதம்தான். இது பொருளாதார அறிக்கையில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
பிரதேச வாரியாக தொழிற்துறையில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு நபரின் சராசரி வருமானம் எவ்வளவு என்று பார்க்கலாம். ஆந்திராவில் 31.24 சதவிகிதம், கேரளாவில் 12.70 சதவிகிதம், மைசூரில் 29.56 சதவிகிதம், ஒரிசாவில் 166.77 சதவிகிதம், டெல்லியில் 60.19 சதவிகிதம், தமிழகத்தில் 39.99 சதவிகிதம் என்ற நிலையை காண்கிறோம். தமிழகத்தைவிட குறைந்திருக்கிற வட மாநிலங்களின் புள்ளி விவரங்களோடு ஒப்பிடாமல் அதிகமாக உள்ள மாநிலங்களோடு ஒப்பிடுகிறீர்களே, இது உங்கள் பிரச்சாரத்திற்காக அல்லவா என்று தொழில் அமைச்சர் அவர்கள் சொல்லக்கூடும்.