கலைஞரின் சட்டமன்ற உரைகள்
217
2,264 கோடி ரூபாய், உரம் 1,125 கோடி ரூபாய், உலோகம் அல்லாத கனிமப் பொருள் 936 கோடி ரூபாய், தொழில் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் தொழில் 913 கோடி ரூபாய், மின்னணுத் தொழில் 242 கோடி ரூபாய், போக்குவரத்துச் சாதனத் தொழில் 1,157 கோடி ரூபாய், கனிமத் தொழில் 412 கோடி ரூபாய், மின் உற்பத்தித் திட்டம் 18,392 கோடி ரூபாய், இரயில்வே தொழில்களில் 765 கோடி ரூபாய் சாலைகள் மற்றும் பாலங்கள் 480 கோடி ரூபாய், தொலைத் தொடர்புத் தொழில்கள் 100 கோடி ரூபாய். அயல்நாட்டு நேரடி முதலீட்டால் ஏற்படக்கூடிய சமூக விளைவுகள் என்னவென்று பார்த்தால், இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டதன் விளைவாக, இந்தியாவில் அயல்நாட்டு நேரடி முதலீடு ஏறுமுகமாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அயல்நாட்டு நேரடி முதலீடு உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் நவீன தொழில் நுட்பத்தை மாநிலத்திற்குக் கொண்டுவர உதவுகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. அந்த நுட்பம்கூடத் தேவையில்லை என்கின்ற அளவிற்கு இன்றைக்கு அரசியல் வட்டாரத்திலே சில பகுதிகளிலே பேசப்பட்டாலும்கூட, அந்தத் தொழில்நுட்பம் இன்றைய விஞ்ஞான உலகத்தில், வளரும் விஞ்ஞான உலகத்தில் எவ்வளவு தேவை என்பதை அதிலும் இந்தியா போன்ற வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கின்ற ஒரு நாட்டு மக்கள், அதிகம் பேர் அடங்கிய நாட்டுக்கு எவ்வளவு தேவை என்பதை நாம் மறந்து விடுவதற்கில்லை.
மாநிலத்தினுடைய சொந்த நிதி ஆதாரத்திற்குக் கூடுதலாக கணிசமான வெளிநாட்டு நிதியாதாரங்களை இந்த அயல்நாட்டு மூலதனம் மூலமாகக் கொண்டுவர முடிகிறது. வெளிநாட்டின் சிறந்த வர்த்தகத்தையும், நிர்வாகத் திறமையையும் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் நிறுவனங்கள் தங்களுடைய தொழிலைத் தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்ய முடிகிறது. பல்வேறு நிலையிலே உள்ள நம்முடைய பொறியாளர்கள், இளநிலை மேற்பார்வை யாளர்கள், பணியாளர்கள் போன்றவர்களின் தொழில் திறமைகள் மற்றும் தொழில் அறிவுத் திறமைகள் கணிசமாக உயர்வடை கின்றன. அவர்களது மதிப்பும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கின்றன. மாநிலப் பொருளாதாரத்தில் ஒட்டுமொத்தமான உற்பத்தித் திறன் அதிகரிப்பதோடு, ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் வழிகோலப்படுகிறது.