26
தொழில்துறை பற்றி
உரை : 2
நாள் : 16.04.1981
கலைஞர் மு. கருணாநிதி : பேரவைத் தலைவர் அவர்களே, தொழில் அமைச்சர் அவர்களாலே அவையின் முன் வைக்கப்பட்டுள்ள தொழில் கொள்கைகள், திட்டங்கள் இவைகளைக் குறித்தும், மானியக் கோரிக்கை குறித்தும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக என்னுடைய கருத்துக்களை வெளியிட விரும்புகிறேன்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான தொழிலாக பெரும் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கக் கூடியதாகவும் வளத்தை தரக்கூடியதாகவும் அமைந்துள்ள வேளாண்மைத் தொழிலுக்கு அடுத்தபடியாக, பெரிய தொழில் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப் படவேண்டும் என்ற கொள்கை நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். வேளாண்மைத் தொழில் தமிழகத்திலேயும் சரி, இந்தியத் திருநாட்டிலேயும் சரி, மிக முக்கியமான பெரும்பான்மை மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்ற தொழில் என்றாலும் கூட, என்னதான் அதற்கு ஊக்கமும் உற்சாகமும், உரமும், சலுகைகளும் வழங்கினாலும் அதனுடைய வளர்ச்சி ஒரு கட்டத்தோடு நின்றுவிடக்கூடியது என்பதும், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட தொகை மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதாலும் பல்வேறு தொழில்களை, சிறு தொழில்களானாலும் நடுத்தர தொழில்களானாலும், பெரும் தொழில்களானாலும், இவைகளை வளர்ப்பதன் மூலமும், விரிவாக்குவதன் மூலமும் புதிதாக உருவாக்குவதன் மூலமும், தொடர்ந்து வேலைவாய்ப்புகளை மக்களுக்கு அளிக்கவும், வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கவும் இயலும் என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப் பட்டிருக்கிறேன்.