கலைஞரின் சட்டமன்ற உரைகள்
303
உரை : 10
நாள் : 23.08.2006
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தொழில் குறித்தும் தகவல் தொழில்நுட்பத் துறை குறித்தும் காலையிலேயிருந்து இதுவரையிலே இந்த மாமன்றத்திலே பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள், தலைவர்கள், தங்களுடைய கருத்துகளை எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். எனக்கு முன்னால் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் கூறியதுபோல, ஏதோ, நானும் தட்டுத் தடுமாறி என்னுடைய பதிலுரையைத் தருவதற்கு முன்வந்திருக்கின்றேன். எல்லோருக்கும் தட்டுத் தடுமாறுகின்ற பருவம் வரும். (மேசையைத் தட்டும் ஒலி). அதை யாரும் தவிர்க்க முடியாது. நான் அவற்றை யெல்லாம் கேலியாகவோ, கிண்டலாகவோ, வசையாகவோ கருதுபவன் அல்ல. இசையாகவே கருதிக்கொண்டு சந்திப்பவன். (மேசையைத் தட்டும் ஒலி)
என்னுடைய உடல்நிலை காரணமாக, நீண்டநேரம் இந்த விவாதத்திலே கலந்துகொள்வதற்கு இயலாது என்பதற்காக, முதலில் பட்டியலிடப்பட்ட மானியக் கோரிக்கைகளை ஒரு சிறிது மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, எதிர்க்கட்சியினுடைய துணைத் தலைவர், கொறடா, இவர்களுடைய ஒப்புதலோடு, தேதி மாற்றம் செய்யப்பட்டு, இன்றைக்குக்கூட அதே உடல்நிலையோடு தான் சில கருத்துக்களை எடுத்து வைக்கின்ற வாய்ப்பை இங்கே நான் பெற்றிருக்கின்றேன். இது தற்காலிகமாக எனக்கு ஏற்பட்டிருக்கின்ற ஒரு நலிவு. யாரும் நிரந்தரமாக இருக்கக்கூடிய நலிவு என்று எண்ணி ஆறுதலடைய மாட்டார்கள்; அகமகிழ்ச்சி கொள்ளமாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
இன்று, என்னுடைய விவாதத்தை ஆரம்பித்து வைத்தவர், நம்முடைய நண்பர் மாண்புமிகு உறுப்பினர் ஜெயக்குமார்