பக்கம்:தொழில் வளம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

தொழில் வளம்


தங்கள் குறைகளை மேலிடத்துக்கு எந்தவிதத் தடங்கலும் இன்றித் தெரிவிக்க வசதியும், குறைகளை நடுநிலை மையில் இருந்து கேட்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வகை செய்து, கூடுமானவரை மேலிடத்துக் குறிக்கோள்களை நன்கு அவர்களுக்கு எடுத்துச் சொல்லவும், நிர்வாகத்தில் அவர்களுக்குப் பங்கு கொள்ளவும், பொழுதுபோக்கு, அபாயத் தடுப்பு முறைகள் (Safety measures), தொழிலாளர் நல வகைகள் (Welfare measures) போன்ற எல்லா வகையிலும் கண்ணுங் கருத்துமாக இருப்பது இப்பகுதியில் இருக்கும் அலுவலரின் கடமையாகும்.

மேலாட்சியினருக்கு முன்னொரு இடத்தில் கண்டவாறு தொழிற்கூடம் நல்ல முறையில் நடத்த உதவும் பல பகுதிகளில் ஒரு சில முக்கியப் பகுதிகளை மட்டும் இங்கே சுருக்கமாகக் கண்டோம். மற்றப் பகுதிகளைப் பற்றி இங்குக் குறிப்பிடாததால் அவைகள் முக்கியம் இல்லை என்றோ, தொழிற்கூட வளர்ச்சிக்கு அவசியம் இல்லை என்றோ கொள்ளக்கூடாது. எப்படிப் பல துறைகளில் இருப்போர் உயர் மேலாட்சிக்கும் தொழிலாளருக்கும் இடையே இயங்க வேண்டும், மேலாட்சியின் குறிக்கோள்களைச் செயல்படுத்தப் பணிபுரிய வேண்டும் என்பதைக் காணவே இவை காட்டப்பெற்றன.

இவை எல்லாம் சரிவர இயங்குதற்கு முக்கியமாய் ஊக்கம் ஊட்ட வேண்டியது மேலிடத்திலிருந்துதான் வர வேண்டும். தொழிலாளி; அலுவலர், தொழிற் கூடம், சமூகம், நுகர்வோர், நாடு இவை எல்லாம் வளம்பெற்று முன்னேற்றம் அடைய, மேலாட்சியில் உள்ளோர் பெரிதும் பொறுப்பேற்று மற்ற எல்லோரையும் விட நிறைய ஊக்கத்துடனும், நிதானத்துடனும் இயங்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/153&oldid=1381991" இலிருந்து மீள்விக்கப்பட்டது