பக்கம்:தொழில் வளம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

தொழில் வளம்


பரந்த இந்தியா முழுவதுக்கும் 35 ஏக்கராவாகக் கணக்கிடப் பெற்றுள்ளது. அக்குறைந்த காட்டுவளத்திலும் மூங்கில், வாட்டல் போன்ற தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற மரங்களும் பிறவளங்களும் குறைவாக உள்ளன. எனவே காட்டுவளம் கொண்டு பெருக்கும் சில தொழில்கள் - காகிதம் செய்தல் போன்ற தொழில்கள் – தமிழ் நாட்டில் அதிக இடம் பெற வாய்ப்பு இல்லை.

கனிப் பொருள்களிலும் தமிழ்நாட்டு வளம் பெருமளவில் இல்லை எனலாம். இந்திய நாட்டில் பிற பகுதிகளில் காணப்பெறும் இரும்புக் கனிப்பொருள் போன்ற சிறந்த மூலப்பொருள் தமிழ் நாட்டில் கிடைக்கவில்லை. இத்துடன் கரியைக் கொண்டுவரும் பெருஞ் செலவும் பிறவும் இரும்பு உருக்காலையை இங்கே வளர்க்கும் வாய்ப்பைத் தள்ளிக்கொண்டே செல்லுகின்றன. எனினும், சேலத்து இரும்புக் கனியும் நெய்வேலி நிலக்கரியும் பெறுகின்ற காரணத்தால் இந்த மூன்றாம் திட்ட காலத்திலேயே சேலத்திலோ அன்றி நெய்வேலியிலோ இரும்பு ஆலை தொழிற்படத் தொடங்கலாம்! அல்லது அதற்குரிய வேலைகளாவது முடிக்கப் பெறலாம். ஆயினும், அத்துறையில் வல்லவர்கள் இந்திய நாட்டின் பிற பகுதிகள் வளரும் அத்துணை அளவில் இங்கே இரும்பு உருக்காலை வளராது என்று கூறுகின்றார்கள். ஒரு சில ஆண்டுகள் கழித்தே அந்த முடிவு சரிதானா என்று நாம் ஆராய வேண்டும். அலுமியத் தொழிலுக்கும் போதிய வாய்ப்பு இல்லை. இன்று சேலத்தில் அலுமினியத் தொழிற்சாலை அமைந்துள்ளது. எனினும், தமிழ் நாட்டில் 20,000 டன் அளவில்தான் அதன் மூலப் பொருளும் உள்ளது எனக் கணக்கிட்டுள்ளனர். இவை அனைத்தும் நெய்வேலி நிலக்கரி வளத்தை அடுத்தே வளர வேண்டியுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/161&oldid=1382034" இலிருந்து மீள்விக்கப்பட்டது