பக்கம்:தொழில் வளம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபமும் தொழில் வளமும்

301


வாணிபத்தில் விற்பவர் வாங்குபவர் இருவருமே முக்கியமானவர். விற்பவனுக்கு இலாபத்திலே குறிக்கோள். வாங்குபவனுக்கோ தான் தரும் பணத்துக்கு ஏற்ற பொருளைப் பெறவேண்டுமே என்ற சிந்தன. இந்த இரண்டுக்கும் இடையிலே உற்பத்தியாளர்கள் இருவர் மனதையும் அறிந்து அதற்கேற்ற வகையில் உற்பத்தியைப் பெருக்குவார்களாயின் நாட்டில் வாணிபம் நல்லவகையில் நடைபெறும் என்பதில் ஐயமில்லை. எத்தனையோ மாறுபட்ட புதுப்புதுப்பொருள்கள் சந்தையில் விற்பனைக்கு வந்தாலும் அவற்றையெல்லாம்விட்டு நல்ல பொருளையே விலை கொடுத்து வாங்கும் வழக்கம் எந்த நாட்டிலும் உள்ளதன்றாே! ‘அந்தக் கம்பெனியின் உற்பத்திச் சரக்கா?; அப்படியாயின் கேட்கவே. வேண்டியதில்லை : வாங்கி வாருங்கள்.’ என்று மக்கள் கூறி நல்ல பொருள்களுக்கு முத்திரையிட்டுவிடுகிறார்களல்லவா அதனாலேயே நாட்டில் உற்பத்தியாளர் தமக்குத் தனியாக உள்ள சிறப்பை உலகில் என்றும் நிலைநிறுத்திக் காட்ட ஒரு முத்திரையை அமைத்துக் கொள்ளுகிறார்கள். இதையே Trade Mark என்கின்றோம். நாள் காட்டி முதல் மருந்துவகை வரையில் பலர் தத்தம் உற்பத்தியை அரசாங்கத்திடம் காட்டித் தமக்கெனத் தனித்தனி முத்திரையைப் பொருத்திக் கொள்ளுகிறார்கள். பாரீஸ் மிட்டாயா என்றும் பிரிட்டானியா பிஸ்கட்டா என்றும் சங்கு மார்க் லுங்கியா என்றும் கேட்டு மக்கள் அவ்வப் பொருள்களில் சிறந்ததாகச் சிலவற்றை வாங்குவதை இன்றும் காண்கிறோம். எனவே உற்பத்தியாளர் தம் இலாபத்தோடு தாம் தொடங்கிய காலத்தில் உற்பத்தி செய்த உயர்ந்த ரகச் சிறப்பை ஒருசிறிதும் குறைக்காமல் இருப்பார்களானால் விற்பவர் வாங்குபவர் யாருக்கும் தொல்லை இருக்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/304&oldid=1382010" இலிருந்து மீள்விக்கப்பட்டது