பக்கம்:தொழில் வளம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

தொழில் வளம்



ரூ 39-5-ஆகவும் உள்ளதெனக் கணக்கிட்டுள்ளார். எனினும் ரூபாய் முப்பதை ஒட்டி இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தனி மனித வருமானம் அமைந்தது என்பதே பலருடைய முடிந்த முடிவு. இந்த நிலையை எண்ணிப் பார்ப்பின் நாட்டின் பொருளாதார அடிப்படை நன்கு விளங்குகின்றதன்றோ. இப்படி இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை அடிக்கடி தனி மனித வருமானத்தினைக் கணக்கிட்டு அதனடிப்படையில் நாட்டுப் பொருளாதார நிலையை மதிப்பிட்டு, அந்நிலை வளர, உயர, ஓங்க மேலும் மேலும் என்னென்ன செய்யவேண்டுமெனப் பல் அறிஞர்களும் ஆய்வுக் குழுக்களும் ஆய்ந்து செயலாற்றியுள்ளனர். அவர்கள் அனைவர்தம் முயற்சியும் உரிமைபெற்றபின் வளர்ந்த உரிமை வேட்கைக்கு மேற்பட்ட பொருளாதார உயர்வு வேட்கையுமே இன்று நம் நாட்டைத் தொழில் மயமாக்கிக் கொண்டு வருகின்றன.

வெறும் உழவுத் தொழிலும் குடிசைத் தொழில்களும் பிற எளிய தொழில் நிலைகளும் மட்டும் போற்றப்படின் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிபெற வாய்ப்பில்லை என்று அன்றைக்குச் சுமார் ஒரு நூற்றாண்டிற்கு முன்பே உணர்ந்த நல்லறிஞர்தம் உள்ளமும் உணர்வும் எண்ணமும் எழுச்சியுமே இன்று நம்நாட்டைப் பிறநாட்டொடு ஒத்து வாழும் நிலைக்கு உயர்த்தியுள்ளன. இதற்குப் பாடுபட்டவர் அறிஞர், ஆய்வாளர், அரசியல் தலைவர், தொண்டர், தொழிற் தலைவர் இன்ன பிறர் பல்லோராவர். அவருள் சிலர் நம்மிடை வாழப் பலர் மறைந்துள்ளனர். அனைவரையும் வணங்கி வாழ்த்தி மேலே செல்கின்றேன்.

1936-ல் இந்திய அரசாங்கம் ஆங்கில நாட்டிலிருந்து இரு தொழிலியல் கல்வித்துறை அறிஞர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/333&oldid=1381970" இலிருந்து மீள்விக்கப்பட்டது