பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 ★ வல்லிக்கண்ணன்

அவர் அப்படிச் சுற்றவிட்டு, என்றைக்கு வீடு வந்து சேர்ந்தாலும், ‘எங்கே போனே? ஏன் போனே? எதுக்காக இத்தனை நாள் தங்கினே?’ என்று அவரை தட்டிக் கேட்கக் கூடியவர்கள் யாருமே கிடையாது. அவரே ராஜா, அவரே மந்திரி, அவரே எல்லாம். பணப் பிரச்னையும் இல்லை சுகவாசி ஆவர்.

இருப்பினும் அவர் மனம் துணிந்து, எண்ணங்கள் கனவுகள்- ஆசைகள் வளர்ந்த அளவுக்கு அவரிடம் செயல் துணிச்சல் இருந்ததில்லை.

எப்படியோ எண்ணத்தில் உரு ஏற்றி இன்று செயலாற்ற சிவகுரு துணிந்து விட்டார்.

பெரிய பஸ் நிலையம் அடைந்தார். சுற்றிச் சுற்றி வந்து பற்பல ரூட்பஸ்’களையும் பார்த்தார். அவை போகக் கூடிய ஊர்களின் பெயர்களையும் கவனித்தார்.

ஒரு பஸ் அவருக்கு வெகுவாக பிடித்திருந்தது. அதன் புது மினுமினுப்பு தேய்ந்து மங்கி அழிந்துபோகவில்லை. பஸ்சின் தோற்றம் எடுப்பாக இருந்தது. அது முடிவாக சேர்கிற இடமும் அவரை வசீகரித்தது. கடலோரச் சிற்றூர் அது என்று அவர் கேள்விப்பட்டிருந்தார்.

ஆகவே, அந்த பஸ்சில் சிவகுரு ஏறி உட்கார்ந்தார். சாப்பாட்டு விஷயம் என்றுமே அவருக்கு ஒரு பெரிய பிரச்னையாகத் தோன்றியதில்லை. வெறும் டீ, வேர்க் கடலை, பிஸ்கட் தினுசுகள் என்று தின்று நாள் கணக்கில் அவரால் கவலையின்றி இருக்க முடியும். அங்கங்கே இருக்கக்கூடிய சாதாரண ஓட்டல், அல்லது ‘கிளப்புக் கடை’ எதிலும் கிடைக்கக்கூடிய தின் பண்டம் அல்லது சிற்றுண்டி எதையும் கொண்டு அவரால் சமாளிக்க முடியும்.