பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் ★ 169

நேரங்களில் வெளியே போவது, வருவது, ஓட்டலில் சாப்பாடு, பொழுது போக்காகப் புத்தகங்கள் படிப்பது. இப்படி அவருடைய உலகம் இயங்கிக் கொண்டே இருந்தது.

இரவு மணி பத்து, பத்தேகால் இருக்கும். சுயம்புவும் அவர் நண்பர் பாஸ்கரும் சிகரெட்பிடித்து, வம்பளந்து, உற்சாகம் பெற்றுக்கொண்டு இருந்தார்கள்.

பாஸ்கரன் பெரிய இடத்துப் பிள்ளை. பொறுப்பான உத்தியோகம் பார்த்து வந்தார். அதிகாரம், பணம், குலக் கெளரவம், ஆள் மதிப்பு முதலிய அந்தஸ்துகள் காரணமாக அவருக்கு அந்த வட்டாரத்தில் சிறிது செல்வாக்கும் ஏற்பட்டிருந்தது. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆசையோடு பொன்னுசாமி என்கிற நபர் அங்கே வந்து, “ஐயா, என்னை நீங்கதான் காப்பாத்தனும். காளிப்பேட்டை ஆசாமிங்க என்னை மிரட்டுறானுக. ராவா என் தலை வேறே உடல் வேறே ஆகப் போகுதுன்னு சொல்றானுக. நீங்க வந்து ரெண்டு அதட்டல் போட்டால் போதும். பொன்னுப்பய வெறும் பயல் இல்லே, தட்டிக் கேட்கச் சரியான ஆள் பலம் இருக்குதுன்னு அவங்களுக்குப்படும்” என்று புலம்பினான்.

“நீ ஏதாவது வாலாட்டியிருப்பே; உன் வாலை ஒட்ட நறுக்குவதற்கு மற்றவனுக கத்தி தீட்டுவானுக!” என்றார் பாஸ்கர்.

“இல்லே. நான் தப்புத்தண்டா எதுவும் பண்னவே இல்லே!” என்று பொன்னு சாதித்தான்.

இந்த விவகாரத்தில் தலையிட பாஸ்கருக்கு மனமும் இல்லை; உற்சாகமும் இல்லை. “இப்போ என்னாலே வர முடியாது. இன்னிக்கு எனக்கு வேலை அதிகம்; ஒரே களைப்பாக இருக்கு. நீ வேணுமின்னா நம்ப ஸாரை அழைத்துப் போ!” என்று சுயம்புலிங்கம் பக்கம் கையைக் காட்டினார் அவர்.