பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்177


பார்வையை அவன் முகத்தில் நிறுத்தி, வசியச் சிரிப்பு தீட்டுவதும் உண்டு. அச்சமயம் அவனுக்கு ஐயோ! 'ஐயோ!' என்று இருக்கும்.

ஆகவே கிருஷ்ணம்மா தன்மீது காதல் கொண்டு விட்டாள் என்று ரகுராமன் நம்பினான். தனக்கு அவள் பேரில் அளவிலாக் காதல் என்று அவன் என்றோ முடிவுகட்டியிருந்தானே! அதனால் ஒருநாள் அவன் துணிச்சல் கொண்டான். கிருஷ்ணி, கிருஷ்ணி என்று ஆசையோடு குழைந்தான்.

அவள் திகைத்துப் போய் நின்றாள். வியப்புடன் அவனைப் பார்த்து 'ஊம்ங்?' என்றாள்.

"உனக்கு என்மீது காதல்தானே?" என்று கேட்டு அவள் மேல் சாய்ந்தான் ரகு.

"ஐயோ, லவ்வே" என்று கிண்டலாகக் கூறி, "வவ்வவ்வே" என்று முகம் சுளித்துப் பழிப்பு காட்டிய கிருஷ்ணம்மா சடாரென விலகிக் கொண்டாள். அதனால் அவன் தடாலென தரையில் விழுந்தான்.

ரகுராமனுக்கு தலையில் நல்ல ഖலி. உள்ளத்திலும் வலி எடுத்தது. கண்கள் நீர் சிந்தின.

"அழாதே கோந்தே, லட்டு முட்டாசி வாங்கித் தாறேன். அப்பா அம்மாகிட்டே சொல்றேன்" என்று அவள் நையாண்டி பண்ணவும், அவனுக்கு ஒரே மானக்கேடுதான்.

உடனே அங்கிருந்து கிளம்பியவன்தான். ரகு மறுபடியும் வீட்டுக்குப் போகவில்லை. எப்படியாவது, ஏதாவது, ஒரு வேலை தேடிக் கொள்வது என்று ஒரு நகரத்துக்கு பிரயாணமானான்.