பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58வல்லிக்கண்ணன்



ஏமாற்றம் பற்றிய நினைப்பும் அவர் மனசை சங்கடப் படுத்தாமல் இல்லை.

என்ன செய்வது?... என்னதான் செய்வது? குழம்பித் தவித்தார் நாவலாசிரியர்.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

பையன் வந்து மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டு விட்டு, மீண்டும் தெருவுக்கு ஓடிப் போனான்.

இப்ப வீட்டை பூட்டிக் கொண்டு, பஸ்சுக்குப் புறப்படலாமா?.... இரவு ஒன்பது மணிக்குள் திரும்பிவிட முயலலாம்....

-வர முடியாமல் போனால்? ராத்திரி திருநகரிலேயே தங்கும்படி ஆகிவிட்டால்? பையன் நிலைமை என்ன?

அவர் மனம் சங்கடப்பட்டுக் கொண்டேயிருந்தது.

மணி மூன்றும் ஆயிற்று. அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

இலக்கிய ரசிகர்கள் விவரம் தெரிந்தவர்கள். நாவல் அறிமுகமும் என்னைப் பாராட்டிப் பேசுகிற காரியமும் நான் இல்லாமலே நடைபெற முடியும். நன்றாகவே நடந்துவிடும். ஆனால் என்னை நம்பி எனது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கிற சின்னப் பையன், ஆச்சியும் அம்மாவும் இல்லாத போது, நானும் இல்லாமல் போய்விட்டால் திண்டாடிப் போவான். வயிற்றுக்கு உணவும், படுத்துத் தூங்கப் பாதுகாப்பான இடமும் இன்றித் தவிப்பான் பாவம்!

நாவலாசிரியர் சுந்தரமூர்த்தி திருநகர் தமிழ் மன்றம் ஆண்டு விழா திகழ்ச்சிக்குப் போகாமலே இருந்து விட்டார். தனது நிலைமையை விளக்கி இலக்கிய நண்பர்களுக்குக் கடிதம் எழுதுவதில் ஈடுபட்டார்.

★'தாமரை'-ஜனவரி 1986