பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

113


எப்படி இவ்வளவு நேரம் உட்கார்ந்து பார்த்தார்!’னு அங்கங்கே கூடி நின்னு பேசிக்கினாங்க...”

“ஏன் பேச மாட்டார்கள்? மனிதரிலும் மனிதர் ‘அதிசய மனிதர்’ என்று பெயர் எடுத்தவராயிற்றே அவர்!”

“அந்த அதிசய மனிதர் என் நாடகத்தை முழுக்க முழுக்க உட்கார்ந்து பார்த்தப்புறம் என்ன நெனைச்சாரோ என்னவோ, ஒரு நாள் என்னைத் தன் வீட்டுக்கு கூப்பிட்டனுப்பினார்; போனேன். தான் நடத்தும் தொழிற்பள்ளி மாணவர்களுக்காக நான் ஒரு நாடகம் நடத்தித் தரணும்னார்; அதற்கென்ன, நடத்தினால் போச்சு'ன்னேன். அந்த நாடகம் அவருடைய தொழிற்பள்ளி அரங்கில், சர்.சி.வி.ராமன் தலைமையிலே நடந்தது. ‘மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது; இந்த மாதிரி நாடகங்களும் தேவை’ ன்னார் ராமன்; நாயுடுவோ, ‘நாட்டின் நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டும் இந்த நாடகக் கலைஞருக்கு, காலத்தின் நிலையை உள்ளது உள்ளளபடிக் காட்டும் கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக அளிக்கிறேன்’னு சொல்லி, ரூபாய் இரண்டாயிரத்தோடு ‘காஸ்ட்லி வாட்ச் ஒன்றையும் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்...மாணவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி, ஆளுக்கொரு ஆட்டோ கிராப் நோட்டை நீட்டி என்னைத் திக்குமுக்காட வைச்சுட்டாங்க.. அத்தனையிலும் கை வலிக்கக் கையெழுத்தைப் போட்டுக் கொடுத்துவிட்டு, ஒரு வழியா வெளியே வந்தேன்..அதற்குப் பின் ஜி.டி.நாயுடு அவர்கள் எனக்கும் என் தொழிலுக்கும் செய்த உதவிகள், நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல...உண்மையிலேயே ரொம்ப ரொம்ப அருமையான காலம் அது...அப்படி ஒரு காலம் மீண்டும் வருமான்னு இப்போ நான் நெனைச்சிப் பார்க்கிறேன்...எங்கே வருது, பெருமூச்சுத்தான் வருது!"