பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

விந்தன்


"கலைஞன் கலைஞனாகத்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். தருமோபதேசம், தத்துவ ஞானமெல்லாம் அவனுக்கு ஏது? இருந்தால் அதெல்லாம் இரவல் சரக்காகத்தான் இருக்கும்.”

“உண்மையான கலைஞன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்?”

“ஆடியன்ஸுக்கு லஞ்சம் கொடுப்பவனாயிருக்கக்கூடாது; அறிவைக் கொடுப்பவனாயிருக்க வேண்டும்.”

“நடிகர்களில் சிலர் பிறந்த நாள் கேக் வெட்டுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?”

“நினைப்பதற்கு என்ன இருக்கிறது ? ‘கேக்’ வெட்றதை ஒரு ‘ஜோக்'கா ஆக்கிட்டான் இந்த நாட்டிலே. மேல் நாட்டிலே அப்படி இல்லை. அதிலே ஒரு சமதர்மச் சித்தாந்தமே அடங்கியிருக்கிறது. மனைவி மக்களோடு வீட்டு வேலைக்காரர்கள், நண்பர்கள், உறவினர்களையெல்லாம் வரவழைத்துப் பிறந்த நாள் கேக்கை வெட்டி, ஒரு துண்டைத் தன் வாயில் போட்டுக்கிட்டு, மற்ற துண்டுகளை ஏற்றத்தாழ்வைப் பார்க்காம அவன் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்கிறான். ஏன் ? தன்னை வந்தடைந்துள்ள புகழ், பொருள் எல்லாவற்றையுமே பிறருடன் பகிர்ந்து கொள்ளத்தான் தயாராயிருப்பதை எடுத்துக் காட்டுவதற்காக. இதுவே கேக் வெட்டுவதன் தாத்பரியம். இதை விட்டுவிட்டுப் பிரஸ் ரிப்போர்ட்டரைக் கூப்பிட்டு “பர்த்டே கொண்டாடறவன் உண்மையான கலைஞனல்ல; அசல் வியாபாரி. அப்படித்தான் என்னாலே சொல்ல முடியும்.”

“கலைஞனை விளம்பரம் தானாகவே தேடி வர வேண்டுமா ? அல்லது, விளம்பரத்தைத் தேடி அவன் ஓட வேண்டுமா ?