பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

விந்தன்


தேவலையே, என்ன வத்தாலும் தானே வாங்கிப் போட்டுக் கொண்டு, யாராவது ஒரு பிச்சைக்காரன் வந்து ஒரு காசு பிச்சை கேட்டால்கூட, ‘இதெல்லாம் தனிப்பட்டவர்கள் தீர்க்கக்கூடிய பிரச்சனையா? அரசாங்கத்தார் பார்த்துத் தீர்க்க வேண்டிய பிரச்சனை!” என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் தர்க்க வாதம் பேசித் தட்டிக் கழிப்பதைவிட, இது எவ்வளவோ மேலானதாயிருக்கிறதே?”

“அந்த ஒரு விஷயத்தாலேதான் எனக்கும் அவரை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அவர் தலைமையிலே ஒரு சமயம் நான் திருவாரூரிலே ஒரு நாடகம் போட்டேன்...”

“என்ன நாடகம்?”

“விமலா அல்லது விதவையின் கண்ணீர்....”

“சர்மாவுக்கு அந்த நாடகம் பிடித்திருந்ததா ?”

“நல்லா கேட்டீங்க! என்னைக் கேட்டா அந்த நாடக சப்ஜெக்ட் அந்தக் காலத்திலேயே எல்லாருக்கும் பிடிச்சிருந்ததுன்னே சொல்வேன். ஆனா, அதை வெளியே சொல்ற துணிவு, ஒப்புக்கிற தைரியம்தான் பலருக்கு அப்பவும் இல்லே, இப்பவும் இல்லே. அதாலேதான் இத்தனை வருஷப் பிரச்சாரத்துக்குப் பிறகும் விதவைங்க பகிரங்கமா மறுமணம் செஞ்சிக்கிறது இந்த நாட்டிலே இன்னும் அபூர்வமாயிருக்கு. தப்பித் தவறி யாராவது செஞ்சிக்கிட்டா அது அதிசயமாக் கூட இருக்கு”

“அதற்கு யார் என்ன செய்ய முடியும்? இத்தனைக்கும் அந்தச் சீர்திருத்தமெல்லாம் இன்று பிரசாரத்தோடு மட்டும் நிற்கவில்லை; அவற்றுக்கு வேண்டிய சட்ட திட்டங்களையும் செய்து வைத்திருக்கிறார்கள். அதையும் பயன்படுத்திக் கொள்ளாமல் பயந்து பயந்து சாகிறவர்களைக் கடவுளே வந்தாலும் இனிக் காப்பாற்ற முடியாது.”

“நம்ம ஜனங்களுடைய மனோபாவம் அப்படி. இதே விஷயத்தைத்தான் அன்னிக்கு சர்மாஜியும் வேறே ஒரு விதத்திலே எடுத்துச் சொன்னார். ‘ராதா நாடகம்னா எனக்கு